Published : 26 Jun 2015 03:22 PM
Last Updated : 26 Jun 2015 03:22 PM

அரசு பள்ளியில் படித்து எம்பிபிஎஸ் சீட் கிடைத்தும் மருத்துவக் கல்லூரி கட்டணம் செலுத்த வழியின்றி தவிக்கும் மாணவர்

புதுச்சேரியில் அரசு பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த வழியில்லாமல் தவித்து வருகிறார் மாணவர் கார்த்தி.

புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாணவர் கார்த்தி. பிளஸ் 2 முடித்துள்ள இவர் நேற்று சென்டாக் மருத்துவ படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு வந்திருந்தார். கலந்தாய்வில் இவருக்கு புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. அதற்கான ஆணையை பெற்றபடி வந்த அவர், அங்கிருந்தோரிடம் கல்விக் கட்டணம் எப்படி செலுத்த போகிறேன் என தெரியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார். இது தொடர்பாக கார்த்தியிடம் விசாரித்தபோது, 'தி இந்து'விடம் அவர் கூறியதாவது:

எனது தந்தை பாலசுப்ரமணியன் டெய்லராக உள்ளார். தாயார் சரளா வீட்டு பணிகளை பார்க்கிறார். டெய்லரிங் தொழிலில் முன்பு போல அதிக வருமானம் வரவில்லை என்பதால் என்னை 6ம் வகுப்பில் இருந்து அரசு பள்ளியில் எனது தந்தை சேர்த்து படிக்க வைத்தார். படிப்பில் எனக்கு ஆர்வமுண்டு. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளிகள் அளவில் மாநிலத்தில் சிறப்பிடம் பெற்றேன். பின்னர், ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தேன்.

பிளஸ் 2 தேர்வில் 1141 மதிப்பெண் எடுத்தேன். கட் ஆப் 190 இருந்தது. சென்டாக்கில் பொதுப்பிரிவு கலந்தாய்வில் எனக்கு புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்திருக்கிறது. எனக்கு அளிக்கப்பட்ட சேர்க்கை ஆணையில், எம்பிபிஎஸ் படிப்புக்கான முதலாண்டு கட்டணமான ரூ.96 ஆயிரத்தை ஜூலை 2ம் தேதிக்குள் கட்டுமாறு கூறியுள்ளார். அவ்வளவு பணத்தை எப்படி கட்டுவது என எனக்குத் தெரியவில்லை.

இந்த ஆண்டு மட்டுல்ல. எம்பிபிஎஸ் படிப்பில் இன்னும் ஐந்தாண்டு கட்டணத்தை எவ்வாறு கட்டுவது என்றும் தெரியவில்லை. எங்கள் குடும்பத்துக்கு அவ்வளவு பணத்தை கட்டுவது மிகவும் கஷ்டம். அரசு மருத்துவக் கல்லூரியில் சேர சேர்க்கை ஆணை கிடைத்ததும் அங்கு இருந்தவர்களிடமே இதை தெரிவித்தேன். நிச்சயம் பண உதவி கிடைக்கும் என்று என்னை தேற்றினார்கள். கண்டிப்பாக யாராவது உதவுவார்கள் என எதிர்பார்க்கிறேன். நிச்சயம் மருத்துவம் படிப்பேன்.

இவ்வாறு மாணவர் கார்த்தி நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

மாணவர் கார்த்தியின் தந்தை பாலசுப்ரமணியன் செல்பேசி எண்: 9789545189

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x