

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதும் நலத் திட்டங்களை முடக்கவும், அதற்கு நிதி ஒதுக்கீட்டை குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒருபகுதியாகவே திட்டக் குழு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் என்ற அமைப்பை பாஜக அரசு அமைத்துள்ளது. தேசிய வளர்ச்சித் திட்டத்தின்கீழ் வரும் மதிய உணவுத் திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற திட்டங்களை ஒரு பிரிவாகவும், சமூக பாதுகாப்பு திட்டங்களை தனியாகவும் பிரிக்க நிதி ஆயோக் குழு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, மத்திய அரசு செயல்படுத்தி வரும் 72 திட்டங்களை 30 ஆக குறைக்கவும், மக்கள் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் இக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இதனை செயல்படுத்தினால் மத்திய அரசு நிதியின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் எண்ணிக்கை குறையும். மாநிலங்களின் சுமை அதிகரிக்கும். எனவே, நிதி ஆயோக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். மக்கள் நலனுக்காக புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதனை மத்திய அரசிடம் தமிழக அரசு வற்புறுத்த வேண்டும்.