Published : 24 Jun 2015 10:06 PM
Last Updated : 24 Jun 2015 10:06 PM

அரசு வேலைக்காக 85 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித்துறை தகவல்

தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏறத்தாழ 85 லட்சம் பேர் பதிவுசெய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், சென்னை மற்றும் மதுரையில் மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. சென்னை மாவட்டத்தில் கூடுதலாக தொழில்நுட்பப்பிரிவு, மாற்றுத் திறனாளிகள் உள்பட 3 சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இயங்குகின்றன.

பட்டப் படிப்பு வரையிலான கல்வித்தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், முதுகலை மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளுக்கான கல்வித்தகுதியை அமைவிடத்துக்கு ஏற்ப சென்னையில் அல்லது மதுரையில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும். பதிவுதாரர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் பதிவினை தவறாமல் புதுப்பித்து வர வேண்டும். அப்போது பதிவுமூப்பு (சீனியாரிட்டி) நடப்பில் இருக்கும்.

இந்த நிலையில், 31.3.2015 வரையில் மாவட்ட, மாநில மற்றும் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவரத்தை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நேற்று வெளியிட்டது. அதன்படி, அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் சேர்த்து பதிவுதாரர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 97 ஆயிரத்து 402. இதில் பெண் பதிவுதாரர்கள் மட்டும் 43 லட்சத்து 24 ஆயிரத்து 881 ஆகும்.

இடைநிலை ஆசிரியர்கள் 81 ஆயிரத்து 777 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 91 ஆயிரத்து 816 பேரும், பொறியியல் பட்டதாரிகள் 2 லட்சம் பேரும் கலை பட்டதாரிகள் 4.26 லட்சம் பேரும், அறிவியல் பட்டதாரிகள் 5.69 லட்சம் பேரும், வணிகவியல் பட்டதாரிகள் 3.22 லட்சம் பேரும் பதிவுசெய்துள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x