ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடிக்கு மேலும் அவகாசம்

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடிக்கு மேலும் அவகாசம்
Updated on
1 min read

திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அடுத்த மாதம் 24-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராம ஜெயம், கடந்த 29.3.2012-ல் திருச்சியில் கொலை செய்யப்பட் டார். இக்கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸாரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றக்கோரி ராமஜெயத்தின் மனைவி லதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி விசாரணை மீது நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். மூன்றரை ஆண்டுகளாக குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இனிமேலும் கால அவகாசம் வழங்குவதால் பலன் ஏற்படாது. எனவே, வழக்கை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பாக அரசு பதிலளிக்க நீதிபதி தெரிவித்தார்.

இந் நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி எஸ்பி அன்பு, டிஎஸ்பி மலைச்சாமி ஆகியோர் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியுமா, சாத்தியமா, குற்றவாளிகள் இவர்கள்தான் என்பதற்கு உறுதியாக ஆதாரங்கள் ஏதாவது கிடைத்துள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு, குற்றவாளிகள் குறித்து முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை வெளிப்படையாக தெரிவித்தால் விசாரணை பாதிக்கப்படும் என எஸ்பி தெரிவித்தார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடும் போது, விரைவில் உண்மையான குற்றவாளிகள் பிடிபட வாய்ப்பு உள்ளது. தடயங்கள் இல்லாததால் குற்றவாளிகளை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது குற்றவாளிகள் தொடர்பாக முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, சிபிசிஐடிக்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.

மனுதாரர் லதாவின் வழக்கறி ஞர் எஸ்.ரவி வாதிடும்போது, கொலையில் தொடர்புடைய குற்ற வாளிகளை விரைவில் கண்டு பிடிக்க வேண்டும். விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என்றார். இதையடுத்து, சிபிசிஐடி போலீஸாருக்கு அடுத்த மாதம் 24-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை ஜுலை 24-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in