

திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் அவரது மருமகன் வி.எம்.ஜோதிமணி மீதான குற்ற வழக்கை 6 மாதங்களுக்குள் முடிக்குமாறு பூந்தமல்லி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த வி.நெடுமாறன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்விக்கு சொந்தமான 2.94 ஏக்கர் நிலம் தாழம்பூர் கிராமத்தில் உள்ளது. செல்வியின் மருமகன் வி.எம்.ஜோதிமணி இந்த நிலத்தை ரூ.5.14 கோடிக்கு விற்க இருப்பதாகவும், அவர்தான் இதற்கான ‘பவர் ஏஜென்ட்’ என்றும் கூறினார். இதையடுத்து அந்த நிலத்தை வாங்க முன்பணம் ரூ.3.50 கோடி கொடுத்தேன். ஆனால், அந்த நிலத்தை அவர் எனக்கு கிரயம் செய்யவில்லை. என் பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதற்கிடையில், அந்த நிலத்தை ஜிஎஸ்கே வேலு என்பவருக்கு விற்றுவிட்டதாக தெரிந்தது. இது பற்றி நில உரிமையாளர் செல்வி யிடம் கேட்கச் சென்றேன். அப் போது, அவரது மருமகன் ஜோதி மணி என்னைத் தாக்கியதுடன், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினார்.
இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் 2012 ஜூலை 5-ம் தேதி புகார் கொடுத்தேன். ஏமாற்றுதல், மிரட்டல் விடுத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பூந்தமல்லி முதலாவது குற்றவி யல் நடுவர் நீதிமன்றத்தில் 2013-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டது. இருப்பினும், அரசியல் பின்னணி காரணமாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. இதை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் இந்த வழக்கை விசாரித்தார். ‘‘செல்வி, அவரது மருமகன் ஜோதிமணி மீதான குற்ற வழக்கு 2013-ல் இருந்து நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி 6 மாதங்களுக்குள் முடிக்குமாறு பூந்தமல்லி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடப் படுகிறது’’ என்றார்.