

பேசின்பிரிட்ஜ் யார்டு அருகே நேற்று சென்னை-கோவை சதாப்தி விரைவு ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கு சதாப்தி விரைவு ரயில் (வண்டி எண்:12243) தினமும் இயக்கப்பட்டு வருகிறது. காலை 7.15 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரயில் மதியம் 2.15 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும். அங்கிருந்து மதியம் 3.20 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.15-க்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். பின்னர் அது பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே உள்ள யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பெட்டிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில், நேற்று காலை 6.30 மணிக்கு சதாப்தி விரைவு ரயில் பேசின்பிரிட்ஜ் யார்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, யார்டு அருகே ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன. இதைக் கண்ட இஞ்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிரேன் மூலம் தடம் புரண்ட பெட்டிகளை நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். ரயில் தடம் புரண்ட சமயத்தில் ரயில் பெட்டியில் பயணிகள் யாரும் இல்லாததால் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
இதற்கிடையே சதாப்தி விரைவு ரயிலைப் பிடிப்பதற்காக காத்திருந்த 500-க்கும் மேற்பட்ட பயணிகள், ரயில் வராததால் ஆத்திரம் அடைந்தனர். அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சதாப்தி ரயில் நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால், பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
கடந்த 17 ந்தேதி அதிகாலையில் பெங்களூர் மெயில், பேசின் பாலம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து நேற்று சதாப்தி விரைவு ரயில் தடம் புரண்டுள்ளது. இது கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்த இரண்டாவது விபத்தாகும். ரயில் தண்டவாளங்களை மோசமாக பராமரிப்பதே இந்த விபத்துகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.