

தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது. கிராமம் முதல் நகரம் வரை உறுப்பினர் சேர்க்கை மூலம் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை ஆம் ஆத்மி உருவாக்கி வருகிறது, என சேலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்ட மன்ற உறுப்பினர் சோம்நாத் பார்தி தெரிவித்தார்.
மண்டல அளவிலான ஆம் ஆத்மி கட்சி ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் தென்னிந்திய பொறுப்பாளரும், டெல்லி மால்வியா நகர சட்டமன்ற உறுப்பினருமான சோம்நாத் பார்தி தலைமை வகித்து, ஆம் ஆத்மி கட்சியை தமிழகத்தில் பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்கினார். பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது. அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல் உள்ளது. குடும்ப அட்டை பெற ரூ.3,000; ஜாதி சான்றிதழ் பெற ரூ.600 என பட்டியலிட்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்குகின்றனர். இதனை ஒழிக்கவே, ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை உறுப்பினர்களைச் சேர்த்து, ஊழலுக்கு எதிரான இயக்கமாக உருவாக்கி வருகிறது.
நானும் என் மனைவியும் 5 ஆண்டுகளாக தனித்தனியாக பிரிந்து வாழ்கிறோம். என் தாயை விட்டும், ஆம் ஆத்மி கட்சியை விட்டும் வரவேண்டும் என்று கூறியதால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நானும் என் மனைவியும் பிரிந்தோம்.
என் மீது மனைவி கொடுத்த புகாரை பாஜக அரசியலாக்கி வருகிறது. என் மனைவி கொடுத்த புகாரின் முதல் தகவல் அறிக்கையை முழுவதும் படித்து பார்த்ததில், தூண்டுதலின் பெயரில் என் மீது புகார் கொடுக்கப்பட்டதாக அறிகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.