

சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011-ல் நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சைதை துரைசாமி, ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
‘‘ஸ்டாலின் துணை முதல்வராக பதவி வகித்ததால், தேர்தலின்போது அரசு இயந்திரங்களை தவறாகப் பயன்படுத்தினார். மகளிர் சுய உதவிக் குழுக்களை பிரச்சாரத்துக்கு ஆதரவாக பயன்படுத்தினார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார். எனவே, தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றதை செல்லாததாக அறிவிக்க வேண்டும்’’ என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி வேணுகோபால் விசாரித்து வருகிறார். மாநில தலைமை தேர்தல் அதிகாரி நேற்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
நீதிபதி வேணுகோபால் முன்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா ஆஜராகவில்லை. இதையடுத்து, வரும் 18-ம் தேதி அவர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என நீதிபதி வேணுகோபால் உத்தரவிட்டார்.