

மெரினா கடற்கரையில் இருக்கும் சிறு வியாபாரிகள், தங்களின் கடைகளை மாநகராட்சி நிர்வாகம் இடம் மாற்றியதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
மெரினாவில் உள்ள 1,500 கடைகளை முறைப்படுத்தும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி கடந்த வாரம் ஈடுபட் டது. கடற்கரை உட்புறச் சாலையை ஒட்டியவாறே அண்ணாசதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை நீண்ட வரிசையில் பல கடைகள் இருந்தன. அந்த கடைகளை அங்கிருந்து அகற்றி, அவற்றை மணற்பரப்பில் கடலை நோக்கிய வரிசையில் மாநகராட்சி இடம் மாற்றியுள்ளது.
சாலையை ஒட்டியவாறு கடை கள் இருந்தால், அவை பொது மக்களுக்கு இடையூறாக இருப்ப தாகவும், பார்ப்பதற்கு அழகாக இல்லையென்றும் மாநகராட்சி கூறி வந்தது. கடைகளை மாற்றி யமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நீண்ட காலமாகவே முயற்சி எடுத்து வந்தனர். ஆனால், அப்படி செய் தால் வியாபாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் எதிர்த்து வந் தனர். பல முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட பின்னர் கடைகள் தற்போது மாற்றியமைக் கப்பட்டுள்ளன. ஆனால், இட மாற்றத்தால் வியாபாரம் பாதிக் கப்படுவதாக அங்குள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.
அங்கு சாட் கடை வைத்திருக் கும் புகழேந்தி கூறும்போது, “மெரி னாவில் வார இறுதி நாட்களில்தான் வியாபாரம் நன்றாக இருக்கும். மற்ற நாட்களில் வருபவர்கள் மணற்பரப்பில் உள்ளே வர மாட்டார் கள். எனவே, இந்த வரிசையில் முதலில் உள்ள கடைகளுக்கு மட்டுமே வியாபாரம் இருக்கும். அது மட்டுமல்லாமல், 4 சாட் கடைகள் இதே வரிசையில் இருந் தால் முதலில் உள்ள கடைக்குத் தான் அதிக வாடிக்கையாளர்கள் வருவார்கள்” என்றார்.
மெரினாவில் சாண்ட்விச் கடை வைத்திருக்கும் அஞ்சலி தேவி கூறும்போது, “வியாபாரமே இல்லை யென்றாலும், இந்த சாண்ட்விச் வண்டிக்கு மாதம் ரூ.2 ஆயிரம் கொடுக்க வேண் டும். இப்போது இட மாற் றத்தால் வியாபாரம் மிகவும் குறைந்துள்ளது. ஒரு சில வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த கடையை அடையாளம் கண்டு தேடி வருகின்றனர்” என்றார்.
மெரினாவுக்கு வந்திருந்த தனி யார் நிறுவன ஊழியர் விக் னேஷ் கூறும்போது, “கடைகள் வரிசையாக இருப்பது பார்ப்ப தற்கு அழகாக இருக்கிறது. குப்பை களையும் குறைக்க இது உதவும் என்று நம்புகிறேன்” என்றார்.
அங்கு வந்திருந்த இல்லத்தரசி மீனாட்சி கூறும்போது, “கடைகள் ஒரு சில இடத்தில் மட்டுமே இருப் பதால், மற்ற இடங்களில் வெளிச்சம் குறைவாக இருக்கிறது. மேலும் கடைகள் மிகவும் தள்ளி தள்ளி இருப்பதால், சாப்பிடுவதற்கு வெகு தூரம் நடக்க வேண்டியிருக்கு” என்றார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி தெரிவித்ததாவது:
கடைகள் எல்லா இடங்களிலும் இருந்தால், எத்தனை கடைகள் உள்ளன என்று எங்களுக்கு தெரிவ தில்லை. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கடை போட்டுக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. எனவே, கடைகளை வரிசைப்படுத்தியுள்ளோம். வாகனங்களை நிறுத்துவதற்கு இப்போது கடைகள் இடையூறாக இருக்காது. குப்பைகளை அள்ளுவதும் எளிதாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.