

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது என்னவோ மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை அளித்திருக்கலாம். ஆனால், இனிவரும் நாட்களில் மெட்ரோ அதிகம் பேசப்படுவதற்கு காரணம், அதன் அதிகக் கட்டணமாகவே இருக்குமென்று சொல்லலாம்.
ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான 10 கி.மீ. தூரத்துக்கு ரூ.40 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு முன்னரே கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
கட்டணத்தை பொறுத்தவரை, கொல்கத்தா மெட்ரோ ரயிலில் பயணிகள் கட்டணம் மிகக்குறைவாக இருக்கிறது. கொல்கத்தா மெட்ரோவில் அதிகபட்ச கட்டணமே ரூ.25 தான்.
டெல்லி மெட்ரோவில் 9 கி.மீ தூரம் முதல் 12 கி.மீ தூரம் வரையிலான பயணத்திற்கு ரூ.16 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. டெல்லி மெட்ரோவில் 44 கி.மீ. தூரம் பயணித்தால்கூட ரு.30 மட்டுமே செலுத்தினால் போதும்.
ஜெய்ப்பூரில் இம்மாதம் முதல் பாதியிலேயே மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது. அங்கு அறிமுகச் சலுகையாக அதிகபட்ச கட்டணமாக ரூ.15 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மும்பை நகரில் கட்கோபார் பகுதியில் இருந்து வெர்சோவா வரையிலான 12.5 கி.மீ தூரம் ஒரு வழிப்பயணத்துக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதுவே, கட்கோபார் - வெர்சோவா - கட்கோபார் பயணத்துக்கு ரூ.60 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயிலில், பாயப்பன்ஹல்லியில் இருந்து எம்.ஜி.ரோடு வரை செல்ல கட்டணம் வெறும் 17 ரூபாய்.
ஆனால், சென்னையில் மட்டுமே 10 கி.மீ. தூர பயணத்துக்கு ரூ.40 என்ற மிக அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு அருகே வசிக்கும் ஒரு நபர் தினமும் பணி நிமித்தமாக ஆலந்தூர் செல்ல வேண்டும் என வைத்துக் கொள்வோம். வாரத்துக்கு 5 நாள் என்று கணக்கிட்டுக் கொண்டால் ஒரு மாதத்துக்கு 22 நாட்கள் அவர் பணிக்கு செல்ல வேண்டும்.
அப்படியென்றால் ஒரு நாள் கோயம்பேடு - ஆலந்தூர் - கோயம்பேடு மெட்ரோ பயணத்துக்கு அவர் ரூ.80 செலவழிக்க வேண்டும். 22 நாட்களுக்கு ரூ.1,980-வும் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனங்கள் பார்க் செய்ய தினமும் ரூ.10 வீதம் 22 நாட்களுக்கு ரூ.220-யும் செலவழிக்க வேண்டும்.
குடும்ப உறுப்பினர்கள் 3 பேருடன் சென்னை மெட்ரோவில் செல்ல வேண்டுமானால், மெட்ரோ ரயில் டிக்கெட்டைவிட டாக்சியிலோ அல்லது ஆட்டோவில் செல்வதே பணத்தை மிச்சம் செய்யும். இருப்பினும் மெட்ரோவில் செல்லும்போது நேரத்தை சேமிக்கலாம், புகை மாசுவில் இருந்து தப்பிக்கலாம்.
சென்னை புறநகர் மின்சார ரயிலில் சென்ன பீச் ஸ்டேஷனில் இருந்து கிண்டி செல்வதற்கு கட்டணம் ரூ.5.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நடுத்தர வர்க்கத்தினரையும், அமைப்பு சாரா தொழில்துறையைச் சார்ந்தவர்களையும் கருத்தில் கொண்டு கட்டணத்தை குறைக்குமா?
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, "மற்ற பெருநகரங்களைப் போல் அல்லாமல் சென்னையில் பெரும்பாலான மெட்ரோ இணைப்புகள் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், மின்சாரம், குளிர்சாதன வசதிக்கு அதிக செலவு பிடிக்கும்" என்றார்.
மெட்ரோ ரயில் கட்டணங்கள் ஓர் ஒப்பீடு:
நகரங்கள் | கட்டணம் (குறைந்தபட்சம் - அதிகபட்சம்) |
ஜெய்ப்பூர் | ரூ.5 - ரூ.15 |
கொல்கத்தா | ரூ.5 - ரூ.25 |
டெல்லி | ரூ.8 - ரூ.30 |
மும்பை (12.3 கி.மீ) | ரூ.10 - ரூ.40 |
சென்னை (10 கி.மீ) | ரூ.10 - ரூ.40 |
பெங்களூரு (6.7 கி.மீ) | ரூ.10 - ரூ.17 |