Published : 19 Jun 2015 08:11 AM
Last Updated : 19 Jun 2015 08:11 AM

பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்வது எப்படி?- மாணவர்களுக்கு அண்ணா பல்கலை. ஆலோசனை

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அது தொடர்பாக மாணவ-மாணவி களுக்கு அண்ணா பல்கலைக்கழ கம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது.

இந்த ஆண்டு பொறியியல் படிப் பில் சேர ஒரு லட்சத்து 54 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர் களுக்கு கடந்த 15-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தரவரிசைப் பட்டியல் இன்று (வெள் ளிக்கிழமை) வெளியிடப்பட்டு பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. கலந் தாய்வுக்கான ஏற்பாடுகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராம் கூறியதாவது:-

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வினை தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 18 ஆண்டுகளாக வெற்றி கரமாக நடத்தி வருகிறது. தற் போது 19-வது ஆண்டாக கலந் தாய்வினை நடத்த உள்ளோம். கலந்தாய்வில் கலந்துகொள்ள வரும் வெளியூர் மாணவர்கள், உடன் வரும் பெற்றோருக்காக தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஓய்வுக் கூடம், குளிக்கும் வசதி, குடிநீர் வசதி, கேண்டீன் வசதி என அனைத்து வசதிகளும் விரைவில் தயாராகிவிடும்.

கலந்தாய்வுக்கு வரும் மாண வருக்கும் துணைக்கு வரும் ஒரு நபருக்கும் அரசு பஸ்களில் 50 சதவீத கட்டணச்சலுகை உண்டு. இதற்கு நாங்கள் அனுப்பும் கலந்தாய்வு அழைப்புக்கடிதத்தின் ஒரிஜினலை நடத்துநரிடம் காண் பித்தால் போதும். இதுவிஷயமாக அரசு போக்குவரத்துக்கு கழக நிர்வாக இயக்குநர்களுக்கு ஏற்கெனவே தகவல் அனுப்பப் பட்டுள்ளது.

கலந்தாய்வு நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக வளாகத் தில் தனியார் கல்லூரியினர் யாரும் விளம்பர நோட்டீஸ் விநியோகிக்கக் கூடாது. யாரேனும் தடையை மீறி துண்டு நோட்டீஸ் வழங்கினால் அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர்.

இவ்வாறு துணைவேந்தர் ராஜாராம் கூறினார்.

கலந்தாய்வு நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரிய ராஜ் கூறியதாவது:-

பொறியியல் படிப்புக்கு விண் ணப்பித்துள்ள ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 238 மாணவ-மாணவி களுக்கும் கடந்த 15-ம் தேதி ரேண்டம் எண் வழங்கப்பட்டது. 250 பேர் இரண்டு முறை விண்ணப்பித்துள்ள னர். மாணவ-மாணவிகளின் எந்த விண்ணப்பமும் நிராகரிக்கப் படவில்லை.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கள் தொடர்ந்து 5 ஆண்டுகள் (8-ம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை) வெளிமாநிலத்தில் படித்திருந்தால் அவர்களிடமிருந்து மட்டுமே நிரந்தர இருப்பிடச்சான்று (நேட்டிவிட்டி சர்டிபிகேட்) கேட்கப்பட்டிருந்தது. அப்போதுதான் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும். இதர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த அகிலஇந்திய பணி அதிகாரிகளின் (ஐஏஎஸ், ஐபிஎஸ்) பொதுப்பிரிவின் (ஓ.சி.) கீழ் பரிசீலிக்கப்படுவார்கள்.

ஒருசில மாணவர்கள் விண்ணப் பத்தில் சாதி சான்றிதழை மாற்றி வைத்திருக்கலாம். அத்தகைய மாணவர்கள் பொதுப் பிரிவின் கீழ்தான் வருவார்கள். ஒருவேளை அவர்கள் கலந்தாய்வின்போது உரிய சாதி சான்றிதழை சமர்ப் பித்தால் அவர்களுக்கான இடஒதுக் கீட்டை பெறலாம். தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் நாளில் (இன்று) இருந்தே கலந்தாய்வுக் கான அழைப்புக்கடிதம் அனுப்பும் பணி தொடங்கிவிடும்.

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் டெபாசிட் கட்டண மாக ரூ.5 ஆயிரம் (எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.1000 மட்டும்) செலுத்த வேண்டும். இதற்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து வர வேண்டிய அவசியமில்லை. கலந்தாய்வு இடத்திலேயே 8 வங்கி கவுன்ட்டர்கள் இயங்கும். அங்கு உரிய கட்டணத்தை செலுத்தி செலானை பெற்றுக்கொள்ளலாம்.

கலந்தாய்வு தினமும் 8 அமர்வுகளாக நடைபெறும். ஒரு அமர்வுக்கு 500 முதல் 800 பேர் வரை என தினமும் ஏறத்தாழ 6 ஆயிரம் பேர் அழைக்கப்படுவர். ஏறத்தாழ 1,000 மாணவர்கள் உட்காரும் வகையில் கலந்தாய்வு காட்சிக் கூடத்தில் (டிஸ்பிளே ஹால்) பெரிய கணினி திரை களில் கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் குறித்த விவரங் களை பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக தெரிந்துகொள்ளலாம். கலந்தாய்வின்போது மாணவர் அல்லது மாணவியுடன் துணைக்கு ஒரு நபர் மட்டும் அனுமதிக் கப்படுவர்.

கலந்தாய்வு நடக்கும் இடத்தில் செல்போனை பயன்படுத்தக் கூடாது. செல்போனை கையில் வைத்திருக்க எந்த தடையும் இல்லை. கலந்தாய்வு நடைபெறும் அரங்கில் 6 ரகசிய கேமராக்கள் நிறுவப்பட்டு முற்றிலும் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு ரைமன்ட் உத்தரிய ராஜ் கூறினார்.

பணியாளர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டாம்

கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பலரும் அங்குள்ள கணினி பணியாளரிடம் கல்லூரி குறித்தும் பாடப்பிரிவு குறித்தும் கேட்பது வழக்கம். இதுபோன்று கணினி பணியாளரிடம் ஆலோசனை கேட்கக்கூடாது என்கிறார் பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமன்ட் உத்தரியராஜ். அவர் மேலும் கூறுகையில், குறிப்பிட்ட கல்லூரியைப் பற்றியோ, அங்குள்ள பாடப்பிரிவு குறித்தோ முதலில் அந்த பணியாளருக்குத் தெரியாது. தெரிந்தாலும் அதுபற்றி கருத்து சொல்லக்கூடாது என்றுதான் நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்தியிருப்போம். மொத்தத்தில் மாணவர்கள் சொல்வதை செய்யும் “ரோபோ” போன்றுதான் அவர்கள் செயல்படுவார்கள்.

கலந்தாய்வின்போது குறிப்பிட்ட கல்லூரியைத் தேர்வுசெய்த பின்னர் வெளியில் இருக்கும் தந்தையிடமோ அல்லது தாயிடமோ அல்லது வேறு யாரிடமோ ஒப்புதல் கேட்க வேண்டுமென்று மாணவர்கள் சொன்னால் அதற்கு கலந்தாய்வில் இடமில்லை. மாணவர்கள் செல்போனில் பேச அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கலந்தாய்வில் என்னென்ன நிலைகள்?

கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு முதலில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்தாய்வு நடைமுறை குறித்து விளக்கம் அளிப்பார்கள். அதைத்தொடர்ந்து, மாணவர்களின் ஒரிஜினல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். அதன்பிறகு கலந்தாய்வு தொடங்கும்.

கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் ஒவ்வொருவராக அழைக்கப்படுவார்கள். அங்கு பணியாளர் ஒருவர் கணினியுடன் அமர்ந்திருப்பார். எந்தெந்த கல்லூரியில் என்னென்ன பாடப்பிரிவுகளில், காலியிடங்கள் உள்ளன என்ற விவரத்தை கணினியில் ஆன்லைனில் பார்க்கலாம். கல்லூரியை தேர்வுசெய்ய போதிய காலஅவகாசம் கொடுக்கப்படும். நேர கட்டுப்பாடு எதுவும் கிடையாது. நீண்ட நேரம் ஆகியும் கல்லூரியை தேர்வுசெய்யாவிட்டால் அங்கு பணியில் இருக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் லேசாக எச்சரிக்கை செய்வார்கள். மூன்று கல்லூரி வாய்ப்புகளை தேர்வுசெய்துகொண்டு கடைசியில் பிடித்தமான ஒன்றை தேர்வுசெய்து கொள்ளலாம். கணினியில் கிளிக் செய்து கல்லூரியை இறுதிசெய்த பிறகு கல்லூரியை மாற்ற இயலாது. குறிப்பிட்ட கல்லூரியை தேர்வுசெய்ததும் உடனடியாக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x