

கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் மாம்பலம் போலீஸார் நேற்று முன்தினம் இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் ஒருவரை பிடித்து விசாரிக்க அவர் முரணாக பேசவே, காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், ராமநாதபுரத்தை சேர்ந்த காளீஸ்வரன்(29) என்பதும், மாம்பலத்தில் ஒரு கடையில் டீ மாஸ்டராக இருப்பதும் தெரிந்தது. மதுவிற்கு அடிமையான காளீஸ்வரன், பணத்துக்காக, வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் சாலையில் நேற்று முன்தினம் இரவில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செயினை பறித்து சென்றனர். உடனே சம்பவம் குறித்து போலீஸாருக்கு தெரிவிக்கவே, போலீஸார் அந்த பகுதியை சுற்றி வளைத்து வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை பிடித்தனர். விசாரணையில் திண்டிவனத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(23), ரமேஷ்(22) என்பது தெரிந்தது. இருவரும் சேர்ந்து கோடம்பாக்கம் பகுதியில் பலரிடம் வழிப்பறி மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 18 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேனாம்பேட்டை காவல் துறையினர் நேற்று முன்தினம் நடத்திய வாகன சோதனையின்போது சந்தேகத்தின்பேரில் 2 பேரை பிடித்தனர். விசாரணையில் சேத்துப்பட்டை சேர்ந்த பாட்ஷா(22), ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த ஆனந்தன்(22) என்பதும், தேனாம்பேட்டையில் பலரிடம் வழிப்பறி செய்ததும் தெரிந்தது. இருவரிடம் இருந்தும் மொத்தம் 6 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.