Last Updated : 11 Jun, 2015 04:44 PM

 

Published : 11 Jun 2015 04:44 PM
Last Updated : 11 Jun 2015 04:44 PM

கன்னியாகுமரியில் சுகாதாரத் துறைக்கு சவால்: பதுங்கி பாயும் பன்றி காய்ச்சல்

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகள் ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்காய்ச்சல் முற்றிலும் தடுக்கப் பட்டுவிட்டதாக எண்ணிய நிலையில் குழந்தைகள் இருவர் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத் துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழகத்தில் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நோய் தொற்றுக்கான வீரியம் குறைந்துள்ளது. இத னால் பன்றி காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களின் விகிதம் கடந்த இரு மாதங்களில் குறைந்துள்ளது.

மருத்துவ சிகிச்சை

சுற்றுலாத் தலமான கன்னியா குமரி மாவட்டத்துக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தினர் அதிகமாக வருவதால் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியது. ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரியில் பன்றி காய்ச்சலுக்கான தனி வார்டு செயல்பட்டு வரு கிறது. பன்றி காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு டீன் வடிவேல் முருகன் மேற்பார்வையில், மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மீண்டும் அதிர்ச்சி

ஏற்கெனவே இந்த வார்டில் 7 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றுள்ளனர். கடந்த ஒரு மாதமாக பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லாததால், மாவட்டத்தில் இந்நோய் யாருக்கும் இல்லை என நம்பப்பட்டது. இந்நிலையில் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்லூரி வட்டாரத்தினர் அதிர்ச்சியடையும் வகையில் இரண்டரை மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தைகள் இருவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் ரத்தமாதிரி திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை செய்த பின் அவர்களுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. குழந்தைகள் என்பதால் தனி கவனம் செலுத்தி மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விரைவில் குணமடைவர்

மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையில் ஒன்று ஏற்கெனவே 3 மாதமாக கடுமையாக பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளது. அந்த குழந்தையிடம் இருந்து உறவினர் குழந்தைக்கும் நோய் பரவியுள்ளது. தற்போது மருத்துவக் கல்லூரி பன்றி காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்று வரும் அக்குழந்தைகளின் நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. பன்றி காய்ச்சல் சிகிச்சைக்கான அனைத்து வசதியும் இங்கே இருப்பதால் அவர்கள் விரைவில் குணம் அடைந்து விடுவர்’ என்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இதுவரை பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து ள்ளது.

விடுதிகளுக்கு புதிய உத்தரவு!

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் மதுசூதனன் கூறும்போது, ‘ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது நிரூபணமாகி உள்ளது. அவர்களுக்கு தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளை சுத்தமாக வைத்திருக்கவும், நோயுற்றவர்கள் போன்று யாரும் வந்தால் உடனடியாக தகவல் தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை பன்றி காய்ச்சலால் இறப்பு ஏதும் இல்லை. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x