

திருக்கழுக்குன்றத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தனியார் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணி, அதிமுக பிரமுகர் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதுபற்றி மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து அவர் அப்பணிகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியின் 18 வார்டுகளில் 34,000 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நாளொன்றுக்கு இப்பகுதி மக்களுக்கு 21 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இதற்காக பேரூராட்சி நிர்வாகம், 12 கி.மீ., தொலைவில் உள்ள வல்லிபுரம் கிராமப்பகுதியின் பாலாற்றில் திறந்தவெளி கிணறுகள் அமைத்து, அதன் மூலம் பேரூராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகித்து வருகிறது.
இந்நிலையில், பருவமழை யின்மை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைவு போன்ற காரணங்களால் குடிநீர் கிணறுகளில் நீர் சுரப்பு முற்றிலும் வற்றி 5 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைக்கிறது. இதனால் பேரூராட்சி பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யும் நிலை உள்ளது. இதனால் குடிநீர் தேவையை சமாளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சேரான்குளம் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் நீர் சுரப்பு அதிகம் உள்ளது தெரியவந்தது. அதிலிருந்து குடிநீர் எடுத்து மக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தனியாரிடமும் ஒப்புதல் பெறப் பட்டது. இதை தொடர்ந்து பேரூர் மன்ற கூட்டத்தில், கடந்த ஏப்ரல் மாதம் ஒருமனதாக தீர்மானம் நிறைவெற்றப்பட்டது.
கிணற்றில் குழாய் இணைப்பு வழங்கி, அதை பேரூர் பகுதிக்கு குடிநீர் வழங்கும் குழாயுடன் இணைப்பதற்காக, வருவாய் துறைக்கு சொந்தமான கால்வாயில் குடிநீர் குழாய் புதைக்கும் பணிகள் தீவிரமாக நடந்தன.
இந்நிலையில் அதிமுக நகர செயலர் முரளிதாஸ் என்பவர் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பொதுப்பணித்துறைக்கு சொந்த மான கால்வாயில் அனுமதியின்றி குழாய்கள் அமைப்பதாக புகார் தெரிவித்து, செங்கல்பட்டு கோட்டாட்சியரிடம் மனு அளித்தார். இதனால், பணிகள் நிறுதப்பட்டன.
இந்நிலையில், திருக்கழுக் குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி தலைமையில் திமுக கவுன்சிலர்கள், மாவட்ட செயலர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் குடிநீர் பணிகளை தொடங்க அனுமதிக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.
பின்னர் இதுதொடர்பாக, பேரூராட்சியின் செயல் அலுவல ரிடம் ஆட்சியர் சண்முகம் விசா ரித்தார். பின்னர் குடிநீர் அவசியம் கருதி அதற்கான பணிகளை தொடங்க நேற்று உத்தரவிட்டார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறும்போது ‘திருக்கழுக்குன்றம் பேரூராட்சியின் கவுன்சிலர்கள், தனியார் கிணற்றிலிருந்து குடிநீர் பெறும் பணிகள் நிறுத்தப் பட்டுள்ளது தொடர்பாக மனு அளித்தனர். கால்வாயில் குழாய் அமைப்பதினால் பாதிப்பு ஏதும் இல்லை என, வருவாய்துறை தெரிவித்துள்ளது. மேலும், பேரூராட் சிகள் துணை இயக்குநரிடம் விசாரித்து, குடிநீர் தேவையின் அவசியம் கருதி, பாதியில் நிறுத்தப் பட்ட பணிகளை மீண்டும் தொடங்க திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் கிருஷ்ண வேணி கூறும்போது ‘அரசின் நிதி இன்றி மக்கள் பங்களிப்புடன் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் தனிநபர் ஒருவரால் இந்த பணிகள் தடைப்பட்டிருந்தது. தற்போது மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.
அரசுக்கு 5 பைசா செலவில்லை
கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் திருக்கழுக்குன்றத்தில் தெய்வசிகாமணி என்ற விவசாயியின் நிலத்தில் உள்ள கிணற்றில் மட்டும் அதிசயமாக அதிக நீர் சுரப்பு உள்ளது. இந்த நீரை பயன்படுத்த முடிவு செய்து அவரை அதிகாரிகள் அணுகினர். பொதுமக்களின் தேவைக்கு என்பதால் இலவசமாக தண்ணீர் எடுக்க அவர் அனுமதி அளித்தார். அவரது பெருந்தன்மைக்கு பலர் நன்றி தெரிவித்தனர்.
மேலும் கிணற்றிலிருந்து நீரை கொண்டு வருதற்கான குழாய்க்கு ஆகும் செலவை திருக்கழுக்குன்றம் ஜெயின் சங்கம் ஏற்றுக்கொண்டது. இதற்காக ரூ.3 லட்சம் நிதியை வழங்கியது.
அதேபோல், குழாய்களை பதிப்புதற்கான பள்ளம் தோண்டும் பணியை அந்தந்த பகுதி கவுன்சிலர்களே தங்களது சொந்த செலவில் செய்கின்றனர். இதனால் அரசுக்கு 5 பைசா செலவில்லாமல் பொதுமக்கள் பங்கேற்புடன் இந்த திட்டம் நிறைவேறுவதாக கவுன்சிலர்கள் கூறினர்.