

சற்றேறக்குறைய படுக்கை நிலைதான் அவருக்கு. இருந்தும் தன்னம்பிக்கை சுடர் பிடித்து பல இளைஞர்களை ஓட வைத்துக் கொண்டிருக்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த ஆல்ட்ரின் பிரிட்டோ (37).
மாற்றுத் திறனாளியான இவர் கடந்த 12 ஆண்டுகளாக `அமுதம்’ என்ற சிற்றிதழையும் நடத்தி வருகிறார். கன்னியாகுமரி மாவட்ட இலக்கிய கூட்டங்களிலும் தவறாமல் பங்கெடுத்து தன்னம்பிக்கை விதை தூவி வருகிறார். நாகர்கோவிலில் ஆல்ட்ரின் பிரிட்டோவை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
`இப்பவும் நினைவில் இருக்கு. அப்போ எனக்கு 5 வயசு. நல்ல காய்ச்சல் அடிச்சுது. அப்பா மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனாங்க. சாதாரண காய்ச்சல் தான்.ஆனால் மருத்துவர் தவறுதலா மூளைக் காய்ச்சல்னு சொல்லி 3 நாளா உடம்பில் அதுக்கான மருந்துகளை செலுத்திட்டார். மூளை காய்ச்சலே இல்லாமல் அதுக்கான மருந்துகளை உள்வாங்குன என் உடல் கொஞ்சம், கொஞ்சமா செயல் இழக்க ஆரம்பிச்சுது.
நரம்பு மண்டலம் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையாகிட்டேன். இன்னொருவர் உதவி இல்லாமல் எழுந்திருக்கவே முடியாத நிலை தான் இப்போதும். ஒரே ஆறுதலான விஷயம் இடது கை விரல்களில் மட்டும் இயக்கம் இருந்தது.
அதை வைச்சே தேர்வு எழுதி சமாளிச்சேன். இலக்கியத்தின் பக்கம் என் கவனத்தை திருப்பினேன். குழந்தைகள் கதையை எழுதத் தொடங்கினேன்.
என் சித்தப்பா சேவியர் ஒத்துழைப்புடன் கடந்த 2004-ம் ஆண்டு `அமுதம்’ என்ற சிற்றிதழை தொடங்கினேன். இலக்கியம், அறிவியல் ஆகியவற்றை மையமாக வைத்து இளைஞர்களை ஊக்குவிக்கும் படைப்புகள் மட்டுமே வெளியிட்டு வருகிறோம்.
சாதி, மதம், அரசியல், சினிமா கட்டுரைகள் அதில் கிடையாது. இதழை தொடங்கும் போதும் `படுக்கையில் இருக்கும் இவரால் எப்படி புத்தகத்தை நடத்த முடியும்? எனக் கேட்டு அதிகாரிகள் கையெழுத்து போடவில்லை. 13 மாதங்கள் வீல் சேரில் அலையோ அலையென அலைந்து தான் கையெழுத்து வாங்கினேன். நானே தான் பக்க வடிவமைப்பு, டைப்பிங் பணிகளை செய்கிறேன்.
படுத்துக் கொண்டே டைப் செய்து விடுவேன். புதிதாக பப்ளிகேஷன் தொடங்கி புத்தகங்கள் வெளியிட்டு வருகிறோம். இளம் படைப்பாளிகளுக்கு பயிற்சி முகாம் நடத்துவது உள்ளிட்ட தொடர் இலவச இலக்கிய சேவை செய்து வருகிறோம்.
உடல் குறைபாடுகளால் முடங்கிப் போய் விடாமல் இதே போல் சமூகத்துக்கு பயன்படும் வகையில் கடைசி வரை இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் விருப்பம்.
என்னோட இந்த முயற்சிகளுக்கு என் அப்பா ஜார்ஜ் விக்டர், அம்மா மார்க்ரெட் ஆகியோர் ன் ரொம்பவும் உறுதுணையா இருக்காங்க’ என்றார்.