

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல் பட்டை அடுத்த ஜிஎஸ்டி சாலையில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மேம்பாலப் பணிகளை அதிமுக அரசு மெத்தனமாக மேற்கொண்டு வருவதாகக் கூறி அதைக் கண்டித்தும், பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தியும் கூடுவாஞ் சேரியில் திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடுவாஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள ஜிஎஸ்டி சாலை, சென்னையை தென்மாவட்டங் களுடன் இணைக்கும் பிரதான சாலை. இந்தச் சாலையையொட்டி அமைந்துள்ள ஏராளமான கிராமங் களைச் சேர்ந்த மக்கள், பல்வேறு தேவைகள் நிமித்தமாக தினமும் ஜிஎஸ்டி சாலை மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
இதனால், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளின் பிரதான சாலைகள், ஜிஎஸ்டி சாலையில் இணையும் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இங்கு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இணைப்புச் சாலை பகுதிகளில், ஆங்காங்கே மேம்பாலம் கட்டும் பணிகள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன. ஆனால், அந்த மேம்பாலப் பணிகள் இதுவரை முடியவில்லை.
இந்த நிலையில், மேம்பாலப் பணிகளை அதிமுக அரசு மெத்தனமாக மேற்கொண்டு வருவதாகக் கூறி, அதைக் கண்டித்து திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலர் தா.மோ. அன்பரசன் தலைமையில் கூடுவாஞ்சேரியில் நேற்று திமுகவினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்தக் கோரியும், தமிழக அரசை கண்டித்தும் முழக் கங்கள் எழுப்பப்பட்டன.
தா.மோ. அன்பரசன் பேசும் போது, ‘திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதால் மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டுள் ளன. அதிமுக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. மேம்பாலப் பணிகளை இனியும் விரைவுபடுத்தவில்லை எனில், சாலை மறியல் நடத்தப்படும்’ என்றார்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரையிலான ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.