

செம்மரக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் கலால் டிஎஸ்பி தங்கவேலுவுக்கு எதிராக 4 போலீஸார் குடியாத்தம் மாஜிஸ்திரேட் முன்பு நேற்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா, பாலூர் கிராமத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் சின்ன பையன் மே 26-ல் கொலை செய்யப் பட்டார். சின்னபையனுக்கும், வேலூர் சத்துவாச்சாரி அடுத்த அலமேலுரங்காபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் அவரது மனைவி ஜோதிலட்சுமி, வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேலு ஆகியோருக்கும் இடையே செம்மரக் கடத்தல் தொடர்பு இருந்து வந்ததாகவும், இதில் 7 டன் எடையுள்ள செம்மரங்களை சின்னபையன் பதுக்கி வைத்து ஏமாற்றியதால் அவர் கொலை செய்யப்பட்டார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கலால் டிஎஸ்பி தங்கவேலு தலைமறைவானார்.
அவரை பிடிக்க போலீஸார் முயன்றபோது, கலால் பிரிவைச் சேர்ந்த சாமுவேல், ராஜேஷ், சீனிவாசன், சவுந்திரராஜன் ஆகிய 4 போலீஸாரும், டிஎஸ்பி தங்கவேலுவின் செம்மரக் கடத்தல் விவகாரத்தில் துணையாக செயல்பட்டது தெரியவந்தது. கலால் துறை போலீஸார் 4 பேரையும் குடியாத்தம் மாஜிஸ்திரேட் முரளிகிருஷ்ணன் ஆனந்தன் (பொறுப்பு) முன்பு ஆம்பூர் தாலுகா காவல் ஆய்வாளர் பாபு ரவிச்சந்திரன் நேற்று ஆஜர்படுத்தினார்.
எரிசாராய தேடுதல் வேட் டைக்கு போக வேண்டும் எனக்கூறி டிஎஸ்பி தங்கவேலு 4 பேரையும் அழைத்துச் சென்றதாகவும், அங்கு சின்னபையன் கோழிப் பண்ணையில் இருந்து டன் கணக் கில் செம்மரக் கட்டைகளை லாரி மூலம் டிஎஸ்பி எடுத்துச் சென்ற தாகவும், இது பற்றி வெளியே சொன்னால் துறைரீதியாக நட வடிக்கை எடுப்பேன் என மிரட்டிய தாகவும் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்தனர்.