ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டினார்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டியில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. நலத் திட்ட உதவிகளை கனிமொழி வழங்கிப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுகவினர் மக்கள் தேவைகளை அறிந்து செயல்படவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் ரவுடிகள் தமிழ் நாட்டை விட்டு ஓடிவிடுவர் என்றனர். அப்படியென்றால் தமிழகத்தில் சட்டவிரோத செயல்கள் யாரால் நடைபெறுகிறது? பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் தற்போது முதியோர் உதவித்தொகை நிறுத் தப்பட்ட அனைவருக்கும் மீண்டும் வந்து சேரும். அதிமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகளை கூடுதலாகத் திறந்ததன் மூலம் வருமா னத்தை உயர்த்தியுள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கப்படுகின்றனர். இதற்கு தேர்தல் அதிகாரி பதிலளிக்க வேண்டும். இதற்கு மக்கள் வரும் தேர்தலில் பதிலளிப்பார்கள் என்றார்.
நலத்திட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை செயற்குழு உறுப்பினர் மகிலன் செய்திருந்தார். திமுக மாவட்ட செயலர்கள் கோ.தளபதி, வி.வேலுச்சாமி, முன் னாள் அமைச்சர் தமிழரசி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன்னாள் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் கோ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
