விவசாய கூலி தொழிலாளியிடம் செஞ்சி மன்னர் கால நாணயங்கள்: அரசிடம் ஒப்படைக்க விரும்புவதாக தகவல்

விவசாய கூலி தொழிலாளியிடம் செஞ்சி மன்னர் கால நாணயங்கள்: அரசிடம் ஒப்படைக்க விரும்புவதாக தகவல்
Updated on
2 min read

செஞ்சி கோட்டையை ஆண்ட விஜய நகர மற்றும் மொகலாய மன்னர் காலத்து நாணயங்களை தான் வைத் திருப்பதாகவும் அவற்றை தமிழக அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் விவசாய கூலி தொழிலாளி குமார் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஊரணிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி குமார். இவர், செஞ்சி கோட்டையை ஆண்ட மன்னர்களின் காலத்து நாணயங் களை கண்டெடுத்து சேகரித்து வைத்துள்ளதாக ‘தி இந்து’ உங்கள் குரல் பகுதியில் தொலைபேசி மூலமாக தெரிவித்தார். மேலும், அவற்றை அரசிடம் ஒப்படைக்க விரும்புவதாகவும் கூறினார். இதை யடுத்து அவரை தொடர்பு கொண்ட போது, ‘தி இந்து’விடம் குமார் கூறியதாவது:

விவசாய கூலி தொழிலாளியான நான் தினமும் 3 கி.மீ. தொலைவு வரை சென்று செஞ்சி கோட்டையில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகே இருக்கும் சர்க்கரை குளத்தில் குளிப்பது வழக்கம். 8 ஆண்டுகளுக்கு முன் அதுபோல குளித்து விட்டு திரும்பும்போது, குத்தரசி மலை அருகில் 25 பைசா அளவில் ஒரு நாணயம் மின்னியது. அதை நீரில் கழுவி பார்த்தபோது அதில் செஞ்சி கோட்டையில் உள்ள ஆஞ்சநேயர் உருவம் மற்றும் 33 என்ற எண் பொறிக்கப்பட்டிருந்தது. விசாரித்தபோது, செஞ்சியை ஆண்ட விஜயநகர நாயக்க மன்னர்கள் கால நாணயம் போல தெரிகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

அதன்பிறகு, ஓய்வு நேரங்களில் கோட்டைக்குள் மண்ணை கிளறி பார்த்து வந்தேன். அவ்வப்போது, நாணயங்கள் கிடைத்தன. அதன்படி, கிபி 1800ம் ஆண்டு நாணயங்கள், மொகலாய பேரரசர் அவுரங்கசீப் கால நாணயங்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட இரும்பு, செம்பு, தங்க நாணயங்களை சேகரித்து வைத் துள்ளேன். இது தவிர, மன்னர் காலத்து விளக்குகள், கணை யாழிகள், ஆங்கிலேயர் காலத்து வெடிக்காத தோட்டா, கஞ்சா புகைக்கும் ஹுக்கா போன்ற பொருட் களும் கிடைத்தன. அவற்றையும் பாதுகாத்து வைத்துள்ளேன்.

இதையடுத்து, செஞ்சி கோட்டையில் பணியாற்றிய மணி என்பவர் என்னிடம் வந்து அருங்காட்சியகத்தில் கொடுத்து விடுவதாக கூறி 364 நாணயங்களை 18.11.2012-ல் பெற்று சென்றார். அது, அரசு அருங்காட்சியகத்தில் முறைப்படி சேர்க்கப்பட்டதா என்பது குறித்து முதல்வரின் தனிபிரிவுக்கு 23.10.2013-ல் கடிதம் அனுப்பினேன். அதற்கு பதிலளித்த சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக உதவி இயக்குநர் (நிர்வாகம்) செல்வ அரசு, ‘அப்படி எந்த நாணயங்களும் கிடைக்கவில்லை. செஞ்சியில் துறை அலுவலகம் ஏதும் இல்லை’ என்று ந.க.எண் 3981/2013/ஜி2.நாள் 10.12.2013 தேதியிட்ட கடிதத்தை எனக்கு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து, என்னிடம் மணி திரும்பி வந்து அந்த நாணயங்களை என்னிடம் திரும்ப கொடுத்து விட்டார். தற்போது, நான் சேகரித்த பழங்கால நாணயங்கள் மற்றும் பொருட்களை அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளேன். இது தவிர, செஞ்சி அருகே ஊரணிதாங்கல் மலை குன்றில் தமிழ் எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றை கல்வெட்டு ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in