

சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியில் நாள்தோறும் வாகனங்கள் கழுவப்படுவதால், தண்ணீர் அசுத்தமாவதாக ‘தி இந்து’ உங்கள் குரலில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், செங் குன்றம் அருகே அமைந்துள்ளது புழல் ஏரி. சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர அரசு திறந்துவிடும் கிருஷ்ணா நதி நீர் புழல் ஏரியில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்நிலையில், புழல் ஏரியில் வாகனங்கள் கழுவுவது, துணி துவைப்பது போன்ற செயல்களால் ஏரி நீர் அசுத்தமாகிறது. ஆக்கிரமிப்பு காரணமாக ஏரியின் பரப்பளவு நாளடைவில் சுருங்கி விடும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து, ‘தி இந்து-உங்கள் குரல்’ எண்ணை தொடர்பு கொண்ட பொதுமக்கள் கூறியதாவது: பரந்து விரிந்த புழல் ஏரியில் நாள் தோறும் லாரி, வேன், கார் உள்ளிட்ட வாகனங்களை பொதுமக்கள் கழுவி தண்ணீரை அசுத்தம் செய்து வருகின்றனர். குறிப்பாக அம்பத்தூர்- பானுநகர், மொண்டியம்மன் நகர்- ஆழமரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் கழுவப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல், செங்குன்றத்தில் பொதுப்பணித் துறை அலுவலகம் அருகே புழல் ஏரியில் பொதுமக்கள் துணி துவைத்து, குளிப்பது வழக்கமாக உள்ளது. அம்பத்தூர்-முருகாம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் ஏரி பகுதி கொஞ்ச கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் ஏரியின் பரப்பளவு நாளடைவில் சுருங்கி விடும் அபாயம் உள்ளது என்று அவர்கள் கூறினர். இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
புழல்ஏரியில் வாகனங்கள் கழுவப் படுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உள்ளோம். செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள் துணி துவைக்கக் கூடாது, குளிக்கக் கூடாது என தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். புழல் ஏரி மட்டுமல்ல, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகளிலும் ஆக்கிரமிப்புகள் பெருகி வருகின்றன. இதனை தவிர்க்க புழல் ஏரியின் எல்லையை அளந்து தருமாறு வருவாய்த்துறையிடம் கோரப்பட்டுள்ளது. அதன் பிறகு, புழல் ஏரி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப் படும் என்று அவர் தெரிவித்தார்.