

எஸ்ஆர்எம் பல்கலை.யில் நடத்தப்பட்டுவரும் 'அயலகத் தமிழாசிரியர்' படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டயமளிப்பு விழா தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இது தொடர்பாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தமிழ் மொழியின் தொன்மை, வரலாறு, பண்பாடு முதலியவற்றை உலகுக்கு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராயம் கடந்த 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் பல்வேறு தமிழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழர்கள் மிகுதியாக வாழ்வதால் அங்கு தமிழ் ஆட்சிமொழியாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது.
ஆனால், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், ரீயூனியன், பிஜி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சவுதி அரேபியா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, டென்மார்க், மியான்மர், நார்வே போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் குறைந்தபட்சம் தமிழைப் பேசவும் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் தமிழ்க்கல்வி பெறுவதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் ‘அயலகத் தமிழாசிரியர்’ எனும் ஆசிரியர் பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இந்த பட்டயப் படிப்பு படித்துவந்த 63 பேரில் 44 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு பட்டமளிக்கும் விழா டர்பன் நகரில் கடந்த ஏப்ரலில் நடைபெற்றது. எஸ்ஆர்எம் பல்கலை. வேந்தர் தா.இரா.பாரிவேந்தர் தலைமையேற்று மாணவர்களுக்கு பட்டயங்களை வழங்கினார்.
இதேபோல ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆஸ்திரேலியத் தமிழ்க் கலாசாலையில் படித்துவந்த மாணவர்களுக்கு பட்டயமளிக்கும் விழா வரும் 11.7.2015 அன்று நடைபெறவுள்ளது.
மேலும் சுவிட்சர்லாந்தில் தமிழ்க் கல்விச் சேவை சுவிட்சர்லாந்து என்ற அமைப்பின் வழியாக இந்த படிப்பு தொடங்கவுள்ளது. முதல் ஆண்டில் இங்கு 90 பேர் சேர்ந்துள்ளனர். இதன் தொடக்க விழா நாளை (ஜூன் 27) சூரிச் நகர நூலக அரங்கில் நடைபெறவுள்ளது.
கனடா நாட்டில் கனேடியன் தமிழ் அகாடமி அமைப்பின் வாயிலாக இந்த படிப்பு நடக்கவுள்ளது. இதில் 60 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதன் தொடக்க விழா டொரன்டோ நகரில் 26.7.15 அன்று நடைபெறவுள்ளது.
இந்த படிப்பு உலகத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.