

1991 ஜூன் 24-ல் முதல்முறையாக தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதா, முதல்வர் பதவி ஏற்ற 25-வது ஆண்டிலும், அவரே தமிழக முதல்வராகப் பொறுப்பு வகிக்கும் சிறப்பை பெற்றுள்ளார்.
1982-ல் அதிமுகவில் இணைந்த ஜெயலலிதா, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் 1989-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், போடிநாயக்கனூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்று, முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானதுடன், தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார்.
பின்னர், ஒன்றிணைந்த அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற அவர், 1991-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றார். அந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி முதல்முறையாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தமிழகத்தில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வர், இளம் வயதில் தமிழக முதல்வரானவர் உள்ளிட்ட சாதனைகளைப் படைத்த ஜெயலலிதாவுக்கு, முதல்வராகப் பொறுப்பேற்றபோது வயது 43.
1991, 2001, 2002, 2011, 2015 என 5 முறை முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, கடந்த 24 ஆண்டுகளில் ஏறத்தாழ 13 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார். இதன்மூலம், கடந்த 24 ஆண்டுகளில் அதிக ஆண்டுகள் முதல்வர் பொறுப்பை வகித்தவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
கடந்த 24 ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலா 2 முறை முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளனர். இதில், கருணாநிதி 10 ஆண்டுகளும், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏறத்தாழ ஓராண்டும் முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளனர். முதல்வராகப் பொறுப்பேற்ற வெள்ளி விழா ஆண்டிலும், தமிழகத்தின் முதல்வர் பொறுப்பைத் தொடர்கிறார் ஜெயலலிதா.