

சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட 5 பட்டப்படிப்புகளுக்கு முதல் நாளில் 530 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கல்லூரி, யுனானி மருத்துவ கல்லூரி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவ கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி என மொத்தம் 6 அரசு கல்லூரிகள் உள்ளன.
இதேபோல 5 தனியார் சித்த மருத்துவ கல்லூரிகள், 3 தனியார் ஆயுர்வேத கல்லூரிகள், 8 தனியார் ஓமியோபதி கல்லூரிகள் 4 தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் என மொத்தம் 20 தனியார் கல்லூரிகள் இருக்கிறது. 6 அரசு கல்லூரிகளில் 336 இடங்கள் மற்றும் 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,000 இடங்கள் உள்ளன.
இந்நிலையில் 2015 - 2016-ம் கல்வி ஆண்டிற்கு சித்தா, ஆயுர்வேத, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி (பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.என்.ஒய்.எஸ், பி.எச்.எம்.எஸ்) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை 6 அரசு கல்லூரிகளில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
முதல் நாளான இன்று சுமார் 530 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது. வரும் 24-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப விற்பனை நடைபெற உள்ளது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சி (அருந்ததியினர்), எஸ்டி ஆகிய பிரிவினர் சுய சான்றொப்பமிட்ட சாதி சன்றிதழின் நகல் மற்றும் பிளஸ்2 மதிப்பெண் நகல் கொடுத்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
சமர்ப்பிக்க வரும் 31-ம் தேதி கடைசி நாள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களை இணைத்து வரும் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் வந்து சேருமாறு சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை www.tnhealth.org என்ற சுகாதரத்துறையின் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். கடந்த ஆண்டு 3,768 மாணவர்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான 3,665 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.