

தமிழகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறனை எதிர்த்து கண்டிப்பாக வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பிரச்சாரக் குழு ஒருங்கிணைப்பாளர் டேவிட் பருண்குமார் இன்று சென்னையில் கூறியது:
"ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ முதல் வேட்பாளர் பட்டியல் வரும் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கள்கிழமை வெளியிடப்படும்.
தமிழகத்தில் இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளனர். அணு உலைக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்த உதயகுமார் உள்ளிட்ட பலரும் கட்சியில் இணைந்துள்ளனர்.
உதயகுமார் வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில், அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய இடிந்தகரையில் இருந்து வெளியே வருவார். அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால், அவரை போலீஸார் கைது செய்வார்கள். அப்படி கைது செய்தாலும், அவர் சிறையில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்வார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் வேட்பாளர்களான ஆ.ராசாவை எதிர்த்து நீலகிரியிலும், தயாநிதி மாறனை எதிர்த்து மத்திய சென்னையிலும் வேட்பாளர்களை கண்டிப்பாக நிறுத்துவோம்" என்றார் டேவிட் பருண்குமார்.