

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை திமுக ஏன் புறக்கணித்தது என்பது குறித்து கட்சித் தலைவர் கருணா நிதி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெய லலிதா வேட்புமனு தாக்கல் செய் வதற்காக தண்டையார்பேட்டை யில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் போர்க்கால அடிப் படையில் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டுள்ளது. மாடியில் இருந்த தேர்தல் அதிகாரி சவுரி ராஜன் அறையை கீழே மாற்றியுள்ளனர். மேஜை, நாற்காலி கள் புதிதாக போடப்பட்டு, புதிய ஏ.சி. இயந்திரங்கள் பொருத்தப் பட்டுள்ளன.
ஜெயலலிதா செல்வதற்கு வசதியாக ரிசர்வ் வங்கி கட்டிடத் தில் இருந்து ராயபுரம் வழியாக தண்டையார்பேட்டை வரையும், திரும்பும் வழியான புதிய கல்லறை சாலை, கடற்கரைச் சாலையில் புதிதாக தார்ச் சாலைகள் போடப்பட்டுள்ளன. வரவேற்பு ஆடம்பரங்களால் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை வாகனங்கள் ஆர்.கே.நகரைச் சுற்றி வருகின்றன. அமைச்சர்கள் அனைவரும் அங்கு முகாமிட்டுள் ளனர். இவை எல்லாம் நடக்கும் என்பதால்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை திமுக புறக் கணித்தது.
சேலம் மாநகராட்சி மன்றத் தில் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. அப்போது குறுக்கிட்டுப் பேசிய திமுக உறுப்பினர் தெய்வலிங்கத்தை அதிமுகவினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொலைக்காட்சிகளில் காட்டப் பட்டது. ஆனாலும், தெய்வ லிங்கம் மீதே வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. இதற்கு பெயர்தான் அதிமுக ஆட்சி.
பழிவாங்கப்படும் அதிகாரிகள்
அதிமுக அரசு பதவியேற்றது முதல் அரசு அதிகாரிகள் பழிவாங் கப்படுவது தொடர்கிறது. திமுக ஆட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்தார்கள் என்பதற்காக சில மூத்த காவல்துறை அதிகாரிகளை அதிகாரம் இல்லாத பதவிகளுக்கு மாற்றியுள்ளனர். நீதிமன்றங்கள் உத்தரவிட்டபோதும் 13 ஆயிரம் மக்கள்நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்தவில்லை.
திமுக ஆட்சியில் ஐ.நா. பணியில் சேர அனுமதி பெற்றார் என்பதற்காக ஐபிஎஸ் அதிகாரி சத்தியபிரியாவை தற்காலிக பணி நீக்கம் செய்தனர். இதை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் அவர் தொடர்ந்த வழக்கில், ‘‘ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றிய காலத்தில் அவர் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. அவர் மீதான நடவடிக்கையை உடனே ரத்து செய்ய வேண்டும்’’ என தீர்ப்பளித் துள்ளது. அதிமுக அரசின் பழி வாங்கும் நடவடிக்கைக்கு இது ஓர் உதாரணம்.
சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை 19 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,816 கோடியிலான மேம்பாலச் சாலை திட்டத்துக்கு கடந்த 2009-ல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். 20 சதவீத பணிகள் முடிந்த நிலையில், இத்திட்டத்துக்கு அதிமுக அரசு 2012 மார்ச் 29-ம் தேதி தடை விதித்தது.
மத்திய அரசு பலமுறை அழுத்தம் கொடுத்தும் தமிழக அரசு கேட்கவில்லை. தமிழகம் வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘சாலைப் பணிகள் தொடர மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்’’ என கூறிய பிறகும் மாநில அரசு அசைந்துகொடுக்கவில்லை. சென்னை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு திட்டத்துக்கே இது தான் நிலை என்றால், தமிழகத்துக்கு முதலீடுகள் எப்படி வரும்?
நியமனத்தில் முறைகேடு
சென்னைப் பல்கலைக்கழகத் தில் 95 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந் துள்ளதாக தகவல் உரிமைச் சட்டத் தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பணிக்கு 3 ஆண்டு அனுபவம், பிஎச்டி படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை மீறப்பட்டு தகுதி இல்லாதவர்களுக்கு பணி வழங்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகளில் 10 சதவீதம்கூட நிறைவேற்றப்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகளில் 60 சதவீதத்தை நிறைவேற்றினால் அதை சாதனையாகக் கருதலாம். இன்னும் ஓராண்டில் இவை அனைத்தையும் செய்ய காலம் இடம் கொடுக்காது. இதுதான் அதிமுக அரசின் சாதனை.
இவ்வாறு கருணாநிதி தெரி வித்துள்ளார்.