

கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் இருக்கும் பறக்கும் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கும் சேவை குறித்து வரும் 8-ம் தேதி தெற்கு ரயில்வே பொது மேலாளர் அசோக் கே.அகர்வால் ஆய்வு நடத்தவுள்ளார்.
ரயில் பயணிகளின் சேவையை மேம்படுத்தவும், ரயில்வேயின் சாதனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்திய ரயில்வே சார்பில் நாடு முழுவதும் கடந்த 26-ம் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வே பொது மேலாளர் அசோக் கே.அகர்வால் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் ரயில் நிலையங்களில் கழிப்பறைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று கடந்த 3-ம் தேதி ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில், வரும் 8-ம் தேதி கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் இருக்கும் பறக்கும் ரயில் நிலையங்களில் ஆய்வு நடத்தவுள்ளார். ஆய்வின் போது, தற்போது வழங்கப்பட்டு வரும் சேவைகள், மேம்படுத்த வேண்டிய சேவைகள் குறித்து பொதுமக்களிடம் அவர் கருத்துக்களை கேட்கவுள்ளார்.