

மதுரையிலிருந்து பெங்களூருக்கு வரும் 26-ம் தேதி முதல் விமான சேவை அளிக்க உள்ளதாக ஏர் பெகாசஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மதுரையிலிருந்து சென்னை, மும்பை ஆகிய நகரங்களுக்கு மட்டுமே தற்போது உள்நாட்டு விமானசேவை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து பெங்களூருவுக்கு அளித்து வந்த விமானசேவையை ஏர் டெக்கான், கிங் பிஷர், ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுக்கு முன்பே நிர்வாக காரணங்களால் நிறுத்திக்கொண்டன.
இதனால் மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் வசிப்போர் பெங்களூரு செல்வதில் சிரமங் களை சந்தித்து வந்தனர். ரயில், கார், பஸ் மூலமே அங்கு செல்ல வேண்டிய கட்டாய நிலை இருந்தது. இந்நிலையில், ஏர் பெகாசஸ் என்ற நிறுவனம் மதுரை யிலிருந்து பெங்களூரு வுக்கு விமான சேவை அளிக்க முன் வந்துள்ளது. வரும் 26-ம் தேதி இச்சேவை யை தொடங்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுபற்றி ஏர் பெகாசஸ் விற்பனை மேலாளர் சி.சண்மு கநாதன் கூறும்போது: வரும் 26-ம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள், வெள்ளி, சனிக்கிழமைகளில் பெங்களூரு-மதுரை இடையே விமான சேவை அளிக்க உள்ளோம். இந்நாட்களில் காலை 10.40 மணிக்கு பெங்களூருவில் விமானம் புறப்பட்டு பகல் 12 மணிக்கு மதுரை வந்தடையும். மதுரையிலிருந்து பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு 1.50 மணிக்கு பெங் களுரு சென்றடையும். அறிமுக சலுகையாக ரூ.1234 பயண கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 66 பேர் பயணம் செய்யலாம். பெங்களூருவிலிருந்து திருவனந்தபுரம், கடப்பா, ஹூப்ளி ஆகிய நகரங்களுக்கும் இணைப்பு விமான சேவை அளிக்கப்படும் என்றார்.
புதிய விமானசேவை குறித்து தனியார் டிராவல் ஏஜென்சி உரிமையாளரான என்.ராம் கூறும்போது, பெங்களுரு-மதுரை விமானசேவை நிறுத்தப் பட்டதால் கடந்த 2 ஆண்டாக தென் மாவட்டத்தினர் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இங்கிருந்து பெங்களூருவுக்கு செல்ல போதுமான அளவு ரயில்கள் இல்லை. விமானத்தில் செல்ல வேண்டுமெனில் சென்னை சென்று, அங்கிருந்து பயணிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. தற்போது மதுரையிலிருந்தே இயக்கப்பட உள்ளதால் தென் மாவட்டத்தினர் பயனடைவர். ஐ.டி. தொழில் நிறுவனங்கள் வர வாய்ப்புள்ளது. மேலும் கர்நாடகாவிலிருந்து கொடைக்கானல், கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேக்கடி, மதுரைக்கு சுற்றுலா வருவோருக்கும் இந்த விமான சேவை பயனுள்ளதாக இருக்கும் என்றார்.