Published : 25 Jun 2015 01:12 PM
Last Updated : 25 Jun 2015 01:12 PM

ஆவின் பால் விவகாரம்: தமிழக அரசு மீது விஜயகாந்த் தாக்கு

ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றதற்காக, அதற்கு துளியும் சம்பந்தமே இல்லாத தமிழக மக்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உலகத்தில் பிறக்கின்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பால் மிகவும் இன்றியமையாத உணவாகும். இதில் உள்ள பல்வேறு இயற்கை சத்துக்கள்தான் மனிதகுலம் நோய், நொடியின்றி வாழ வழிவகை செய்கின்றது. அத்தகைய சிறப்புகள் பெற்ற பாலில் கூட பல ஆண்டுகளாக கலப்படம் செய்து பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு, அதில் குற்றவாளியான அதிமுக பிரமுகர் வைத்தியநாதன் ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.

ஆனால், அவர் பால் கலப்படத்தின் மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கி குவித்த சொத்துக்களை, தமிழக அரசு இன்று வரை முடக்கவோ, கையகப்படுத்தவோ நடவடிக்கை எதுவும் எடுத்ததாக தெரியவில்லை. மேலும் அதில் சம்பந்தப்பட்டுள்ள பலர்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.

பால் உற்பத்தி செய்கின்ற விவசாயிகள் பால் கூட்டுறவு சங்கத்திற்கு கொள்முதலுக்காக கொண்டுவரும் தங்களுடைய பாலை, கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக கொள்முதல் செய்வதில்லை என்றும், ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு உரிய தொகையை தராமல் நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்து இழுத்தடிப்பதாகவும் குற்றச்சாட்டை எழுப்புகின்றனர்.

பால் கூட்டுறவு சங்கங்கள் மிகவும் குறைவான அளவில் பாலை கொள்முதல் செய்வதற்கு முழுமுதற் காரணம், குளிர்பதன வசதியுள்ள பால் சேமிப்பு நிலையங்கள் மிகக்குறைந்த அளவே தமிழகத்தில் இருப்பதுதான் என்றும், பல ஆண்டுகளாக பால் விற்பனை ஒரே அளவில் இருப்பதாகவும், அதன் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடாமல் மெத்தனமாக இருப்பதாகவும் விவசாயிகள் புகார் கூறுகிறார்கள்.

தமிழ் நாட்டில் வெண்மை புரட்சியை உருவாக்குவேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறினாலும், அதற்குரிய திட்டங்கள் எதுவுமே செயல்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. கறவை மாடுகள் வாங்கியதில் கூட சரியான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை, அதனால் இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டம் அரசின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிமுக அரசு 2011ல் ஆட்சிக்கு வந்த பிறகு பால் விலையை இரு மடங்காக உயர்த்தி மக்கள் தலையில் சுமையை ஏற்றியுள்ளது. அந்த உயர்த்தப்பட்ட விலையை கொடுத்து ஆவின் நிறுவனத்தில் வாங்கப்படும் பால், ஆவின் நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் கெட்டுப்போவதும், அதை வாங்கிய மக்கள் கீழே கொட்டுவதும் என்ற பரிதாபமான நிலை தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதை சீர்படுத்தி செம்மையாக்க வேண்டிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவோ ஆட்சி நிர்வாகத்தை பற்றி சிறிதும் கவலைப்படாமல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றிய கவலை தான் அவருக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பால் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பாரா? என பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் பல திட்டங்களும், திறப்பு விழாக்களும் நிறுத்திவைக்கப்பட்டு, மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்ற பின் செயல்படுத்தப்பட்டன. அது குறித்து கேட்டால் அதிமுகவில் பலரும் ஜெயலலிதா வந்த பிறகு செயல்படுத்துவதிலே என்ன தவறு, அதற்காக மக்கள் சுமார் பத்து மாதம் காத்திருப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது என, மக்களை துச்சமாக நினைத்து வியாக்கியானம் பேசுகின்றனர். ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றதற்காக, அதற்கு துளியும் சம்பந்தமே இல்லாத தமிழக மக்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?'' என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x