Published : 29 Jun 2015 07:56 AM
Last Updated : 29 Jun 2015 07:56 AM

ஹெல்மெட் விலை இரு மடங்கு உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி: அநியாய விற்பனையை கண்காணிக்க அரசுக்கு கோரிக்கை

ஹெல்மெட் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. விலையை முறைப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹெல்மெட் கட்டாய சட்டம் ஜூலை 1 முதல் தீவிரமாக கடைபிடிக்கப்பட உள்ளது. இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் ஹெல்மெட் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. பல கடைகளில் ஹெல்மெட் இருப்பு இல்லை. குறிப்பாக பெண்கள் அணியும் மாடல்களில் ஹெல்மெட்கள் இல்லை. இந்நிலையில் விலையும் அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக புளியந் தோப்பைச் சேர்ந்த ஆர்.சரவணன் கூறியபோது, “கடந்த மாதம் வரை ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்ட ஹெல் மெட் தற்போது ரூ.750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எந்த ஹெல்மெட்டிலும் அதிகபட்ச விலை குறிப்பிடப்படவில்லை. கடைக்காரர்கள் விருப்பம் போல் விலையை உயர்த்திக் கொள்கின்றனர். அதனால் ஹெல்மெட் விலை நிர்ணயத்தை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும்” என்றனர்.

ஜோதி ஹெல்மெட் விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்த ஆர்.குமார் கூறும்போது, “நாங்கள் ஹெல்மெட்களை பெங்களூர், பெல்காம், டெல்லி, மும்பை போன்ற பகுதிகளிலிருந்துதான் வாங்குகிறோம். வழக்கமாக அவை சாலை வழியாக கொண்டுவரப்படும். அவற்றை ரூ.350 முதல் ரூ.3,500 வரையிலான விலையில் விற்கிறோம். கடந்த ஒரு வாரமாக ஹெல்மெட் தேவை அதிகமாக இருப்பதால், சாலை வழியாக கொண்டுவருவதாக இருந்தால் மிகுந்த தாமதமாகும்; மேலும் ஜூலை 1 வரைதான் நல்ல விற்பனை இருக்கும். அதனால் ரயில் மற்றும் விமானம் வழியாக ஹெல்மெட்டுகளை வேகமாக கொண்டு வருகிறோம். இவ்வாறு செய்வதால் போக்குவரத்து செலவு பல மடங்கு கூடுகிறது. இதை சமாளிக்க ஹெல்மெட் விலையை உயர்த்த வேண்டியுள்ளது” என்றார்.

ஹெல்மெட்டுடன் பூட்டு, தொப்பி

அதிக அளவில் ஹெல்மெட் விற்பனை செய்யப்படும் நிலையில் அவற்றுக்கு இணையாக துணை பொருட்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த ரெய்சிங் ஸ்டார் என்ற ஹெல்மெட் மற்றும் துணை பொருட்கள் விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்த டி.நடராஜன் கூறும்போது, “ஹெல்மெட் வாங்கினால் மட்டும் போதாது. அதை வாகனத்தில் வைத்து பூட்ட பூட்டு அவசியம். வியர்வையிலிருந்து பாதுகாக்க தொப்பி அவசியம். தற்போது ஹெல்மெட்களுக்கு இணையாக பூட்டு, தொப்பி விற்பனையும் அதிகரித்துள்ளது. வாகனத்தில் பொருத்தக் கூடிய பூட்டு, ஒயர் வகை பூட்டு என இரு வகைகள் உள்ளன. பூட்டுகள் ரூ.100 முதல் 150 வரையிலும், தொப்பிகள் ரூ.20 முதல் ரூ.35 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன” என்றார்.

6 ஆயிரம் இடங்களில்..

தமிழகம் முழுவதும் வருகிற 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும். புதிதாக ஹெல்மெட் வாங்கிய பில்லை காட்டினால்தான் இந்த ஆவணங்கள் திருப்பிக்கொடுக்கப்படும். ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அவர்கள் ஆவணங்களையும், ஹெல்மெட் பில்லையும் காட்டினால்தான் வாகனம் திருப்பிக் கொடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் 1-ம் தேதி முதல் ஹெல்மெட் விதியை அமல்படுத்த காவல் துறை தயாராகி வருகிறது. தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் இடங்களில் ஹெல்மெட் சோதனை நடத்தப்படும். வாகன நெருக்கடி அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சென்னையில் 120 இடங்களில் ஹெல்மெட் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கூடுதல் அவகாசம் வேண்டும்

ஞாயிற்றுக்கிழமையான நேற்று சென்னையில் ஹெல்மெட் கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஆனால், கடைகளில் ஹெல்மெட் இருப்பு குறைவாக இருந்ததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். எனவே ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்குவதை ஒத்திவைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அண்ணா சாலையில் உள்ள ஹெல்மெட் கடை உரிமையாளர் ஷபீக் கூறும்போது, "சாதாரணமாக ஒரு நாளுக்கு 60 ஹெல்மெட்கள் விற்ைபனையாகும். வார இறுதி நாட்களில் 100 ஹெல்மெட்கள் விற்கும். ஆனால் இப்போது ஒரு நாளுக்கு சுமார் 700 வரை விற்பனையாகின்றன. வார இறுதி நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வருகின்றனர்"

ஆந்திரத்திலும் கட்டாயம்

அண்ணா சாலை ஹெல்மெட் கடை உரிமையாளர் அமான் கூறும்போது, "வாடிக்கையாளர்கள் இணையதளங்களில் பார்த்துவிட்டு ஒரு சில நிறுவனங்களின் ஹெல்மெட்டுகள் மட்டுமே வேண்டும் என்று கூறுகின்றனர். ஆந்திர மாநிலத்திலும் ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் என்பதால் தமிழகத்துக்கு போதிய ஹெல்மெட் வருவதில்லை. கட்டாயமாக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டால் எங்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

ஹெல்மெட் வாங்க வந்திருந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த ராஜாசிங்கம் கூறும்போது, "இதுவரை 3 கடைகளுக்கு சென்றுவிட்டேன். எல்லா கடைகளிலும் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிவதால் திரும்பி வந்துவிட்டேன். கூட்டம் இல்லாத கடையில் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய ஹெல்மெட்டுகள் கிடைப்பதில்லை" என்றார்.

சிறுவர்களுக்கான ஹெல்மெட் விற்பனை மந்தம்

சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சிறுவர்களுக்கான ஹெல்மெட் விற்பனை மந்தமாக உள்ளது.

தமிழகத்தில் ஜுலை 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், அதில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஹெல்மெட் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சிறுவர்களுக்காக சுமார் 400 ரூபாய்க்கு பிரத்யேகமான ஹெல்மெட்டுகளும் சந்தையில் விற்கப்படுகிறது. ஆனால் அவற்றுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இதுபற்றி சென்னை பல்லாவரத்தில் ஹெல்மெட் விற்பனை மையம் நடத்தி வரும் ரமேஷ் என்பவர் கூறும்போது, “2 சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதால் அதையும் கொள்முதல் செய்தோம். ஆனால், அவை பெரியளவில் விற்பனை ஆகவில்லை. சிறுவர்களுக்கான ஹெல்மெட் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததுதான் இதற்கு காரணம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x