

சர்ச்சைக்குரிய மாணவர் அமைப்பு மீதான தடை விவகாரம் தொடர்பாக சென்னை ஐஐடி-யில் இன்று (வெள்ளிக்கிழமை) அவசரக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை ஐஐடியில் இயங்கி வந்த ‘அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம்’ மாணவர் அமைப்பு, மத்திய அரசின் கொள்கைகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் தவறாகப் பிரச்சாரம் செய்ததாகக் கூறி அந்த அமைப்பை ஐஐடி நிர்வாகம் கடந்த மே 15-ம் தேதி தடை செய்தது. மாணவர் அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்ததற்கு தமிழக அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கங்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றன.
இதற்கிடையே, அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்ட நிர்வாகிகள் ஐஐடி பொறுப்பு இயக்குநர் பேராசிரியர் கே.ராமமூர்த்தியை கடந்த 2-ம் தேதி சந்தித்துப் பேசினர். அப்போது, வாசகர் வட்டத்துக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்க வேண்டும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய டீன் நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர் அமைப்புகளுக்கு அங்கீகாரம் அளித்து அவை சமூக, பொருளாதார, அரசியல் கருத்துகளை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கும் வகையில் ஜூன் முதல் வாரத்தில் மாணவர் வாரியத்தின் அவசரக் கூட்டத்தை கூட்டுவதென்று அப்போது முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, அவசரக் கூட்டம் ஐஐடியில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் ஐஐடி இயக்குநர் (பொறுப்பு), டீன், பேராசிரியர்கள், மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.