Published : 28 Jun 2015 11:14 AM
Last Updated : 28 Jun 2015 11:14 AM

அடுத்தடுத்து தடம்புரளும் ரயில்கள்: பரமரிப்பு பணிகளில் ஏற்படும் தொய்வு காரணமா?

சென்னையில் அடுத்தடுத்து ரயில்கள் தடம்புரள்வதற்கு பராமரிப்பு பணிகளில் ஏற்படும் தொய்வே காரணம் என்று புகார் எழுந்துள்ளது.

வெளியூர்களுக்கு பயணம் செய்யும் பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். ரயில் பயணம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று பயணிகள் நம்புவதே இதற்கு காரணம். இந்நிலையில் சென்னை சென்ட்ரல் அருகே சமீபத்தில் அடுத்தடுத்து ரயில்கள் தடம் புரண்டன. கடந்த 17–ம் தேதி அதிகாலையில் பெங்களூரு மெயில் பேசின் பாலம் அருகே தடம்புரண்டது.

இந்த ரயில் குறைந்த வேகத்தில் வந்ததால் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதையடுத்து, கடந்த 20-ம் தேதி யார்டில் இருந்து சென்ட்ரலுக்கு கொண்டு வரப்பட்டபோது கோவை சதாப்தி விரைவு ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த சம்பவங்கள் ரயில் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

ரயில் பயணம் பாதுகாப்பான தாக இருக்க தண்டவாளங்களை தினமும் பராமரிக்க வேண்டும். அதன்படி கடந்த 1994-95-ல் ரயில்பாதை பராமரிப்பு ஊழியர்கள் பிரிவில் (டிராக்மேன்) மொத்தம் 4 லட்சத்து 16 ஆயிரத்து 851 பேர் பணியாற்றி வந்தனர். ஆனால், 2013-ம் ஆண்டு நிலவரப்படி அந்த எண்ணிக்கை குறைந்து 3 லட்சத்து 8 ஆயிரத்து 307 பேர் பணியாற்றுகின்றனர்.

1 லட்சத்து 8 ஆயிரத்து 544 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், ரயில்பாதை பராமரிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ரயில்கள் தடம்புரள்வதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்று ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக டிஆர்டியு செயல் தலைவர் இளங்கோவ னிடம் கேட்டபோது, ‘‘ரயில் போக்கு வரத்தில் தண்டவாளங்களை பராமரித்தல் என்பது முக்கியமான பணியாகும். தண்டவாளங்கள் தரமானதாக இருந்தால்தான் ரயில்களை பாதுகாப்பாகவும், வேகத்தை கூட்டியும் ஓட்ட முடியும். 6 கி.மீ தூரத்துக்கு 10 பேர் கொண்ட குழுவினர் தண்டவாளங்களை பராமரிப்பார்கள். வெயில் காலத்தில் ரயில் தண்டவாளம் விரிவடை யும், குளிர்காலத்தில் சுருங்கி இருக்கும். இரவில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற் கொள்ள வேண்டும்.

ஆனால், தண்டவாளங்களை பராமரிக்கும் பணியில் தற்போது சுமார் ஒரு லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. குறிப்பாக தெற்கு ரயில்வேயில் 19,765 தொழிலாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், 16,470 தொழி லாளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்’’ என்றார்.

இதுதொடர்பாக சென்னை கோட்ட ரயில் பயணிகள் ஆலோ சனை குழு முன்னாள் உறுப்பினர் கே.பாஸ்கர் கூறும்போது, “ விரைவு ரயில்கள் அடிக்கடி தடம்புரள்வது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னை சென்ட்ரல் - பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் இடையே அடிக்கடி ரயில் விபத்துகளும், தடம்புரளும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, இப்பகுதியில் உள்ள தண்டவாளங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x