

மருத்துவப் படிப்பு பொதுப் பிரிவினருக்கான 3-ம் நாள் கலந்தாய்வில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 562 எம்பிபிஎஸ் இடங்கள், 15 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டன.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கை பொதுப் பிரிவினருக்கான 3-ம் நாள் கலந்தாய்வு, சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த கலந்தாய்வில் பங்கேற்கு மாறு 649 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டன. 629 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றனர்.
காத்திருப்போர் பட்டியலில் 52 பேர்
கலந்தாய்வு முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 428 எம்பிபிஎஸ் இடங்கள், தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் 134 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி யில் 15 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 577 இடங்கள் நிரப்பப்பட்டன. 52 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக் கப்பட்டுள்ளனர். பொதுப் பிரிவின ருக்கான 4-ம் நாள் கலந்தாய்வு இன்று நடக்கிறது.
எம்எம்சி-யில் 2 இடம் உள்ளன
பொதுப் பிரிவினருக்கான 3-ம் நாள் கலந்தாய்வு முடிவில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 710 எம்பிபிஎஸ் இடங்கள், 8 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் 433 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 69 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) 2 எம்பிபிஎஸ் இடங்கள், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 38 எம்பிபிஎஸ் இடங்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 24 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் அண்ணாசாலை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் 34 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக இருக்கின்றன.