

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளதை திமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, தமாகா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்றுள்ளன.
டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக செய்தித் தொடர்பு செயலாளர்):
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்ற கர்நாடக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பல பிழைகள் இருப்பதை சுட்டிக்காட்டி மேல்முறையீடு செய்ய வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தி வந்தோம். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தேவையான நேரத்தில் எங்களது வாதங்களை தாக்கல் செய்வோம்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் தலைவர்):
கர்நாடக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் 20 நாட்களிலேயே இந்த முடிவை எடுத்துள்ளது பாராட்டுக்குரியது.
விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உயர் நீதிமன்றம் முழுமையாக ரத்து செய்துள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தான் நீதி கிடைக்கும் என்பதால் கர்நாடக அரசின் முடிவை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது.
ராமதாஸ் (பாமக நிறுவனர்):
கர்நாடக அரசின் முடிவு வரவேற்கத் தக்கது. இதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா, தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேல் முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசின் சார்பில் வாதாட ஆச்சார் யாவை நியமிக்கலாம் என அம் மாநில அரசு பரிந்துரை செய்துள் ளது. இவ்வழக்கின் அனைத்து நுணுக்கங்களையும் அறிந்தவர் என்பதால் அவரையே அரசு வழக் கறிஞராக நியமிக்க வேண்டும்.
தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்):
சட்டம் வழங்கி யுள்ள வாய்ப்பை பயன்படுத்தி ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இந்த வழக்கில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்க இந்த மேல்முறையீடு வழிவகுக்கும். எனவே, இதை தமிழக பாஜக வரவேற்கிறது.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்):
எந்தவொரு வழக்கிலும் மேல்முறை யீடு செய்ய சட்டத்தில் வழி உள்ளது. இந்த வழக்கில் சட்ட அமைச்சகம், சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது. இதை சட்டத்துக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட முடிவாகவே தமாகா கருதுகிறது.
கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்):
கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோரின் பரிந் துரைப்படி ஜெயலலிதா விடு தலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பல முரண்கள் இருப்பதால் மேல்முறையீடு செய்வது சரியான முடிவாகும். இந்த முடிவை திராவிடர் கழகம் வரவேற்கிறது.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர்):
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து தாமதமின்றி மேல்முறையீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப் போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர்):
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள் ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து கடந்த மே 11-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என்ற கர்நாடக அரசின் முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு வரவேற்கிறது.