கூட்டுறவு வீட்டுவசதி சங்க கடன்களை ரத்து செய்ய வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை

கூட்டுறவு வீட்டுவசதி சங்க கடன்களை ரத்து செய்ய வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை
Updated on
1 min read

கூட்டுறவு வீட்டுவசதி சங்க கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பெறப்பட்ட கடன்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என 2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுக வாக்குறுதி அளித்தது.

ஆனால், ஆட்சிக்கு வந்ததும், வட்டி, அபராத வட்டி தள்ளுபடி உள்ளிட்ட எந்த சலுகையையும் அளிக்காமல் முழு கடனையும் ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என கெடுபிடி செய்து வருகிறார்கள். அப்படி கட்டாவிட்டால் வீட்டை ஜப்தி செய்து, ஏலத்தில் விடுவோம் என மிரட்டி வருகின்றனர். இதனால் கடன் வாங்கி வீடு கட்டிய ஏழைகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் ஜப்தி செய்வது, ஏலத்தில் விடுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட்டு, கூட்டுறவு வீட்டுவசதி சங்க கடன் தொகை முழுவதையும் ரத்து செய்ய வேண்டும்.

மேலும், தமிழகத்தில் உள்ள 28 அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாக ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் தலைமைச் செயலகத்தில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் மலைபோல குவிந்துள்ளன. இதனால் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது'' என்று இளங்கோவன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in