

திருச்சியில் காவிரி நீரில் தொடர்ந்து கழிவுகள் கலப்பதாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன.
கர்நாடக மாநிலத்தில் காவிரியில் கழிவுநீர் கலப்பதாக விவசாய சங்கங்கள் புகார் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றன. இந்நிலையில், தமிழகத்திலேயே காவிரியில் கழிவுநீர் கலப்பதாக புகார் எழுந்துள்ளது விவசாயிகளை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
திருச்சியில் காந்தி படித்துறை, அம்மா மண்டபம் படித்துறை பகுதிகளில் மக்கள் நீராடி வருகின்றனர். மேலும், காவிரியாற்றின் நீரை புனித நீராகக் கருதி, பலர் தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கின்றனர்.
காவிரிக் கரையில் பாப்பம்மாள் சத்திரம் முதல் அப்பர் மண்டபம் வரையிலான பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. திருச்சி நகரிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குடமுருட்டி பாலம் வழியாக காவிரியாற்றில் கலப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும். இங்கு, மாநகராட்சி சார்பில் கழிவுநீரை வெளியேற்றுவதற்காக தனி நீரேற்று நிலையம் உள்ளது. ஆனால், அதனால் ஒரு பயனுமில்லை என்கின்றனர் காவிரிக் கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள்.
இதுகுறித்து திருச்சி தண்ணீர் அமைப்பைச் சேர்ந்த கே.சதீஷ்குமார் கூறும்போது, “ஆற்றுநீரில் கழிவுநீர் கலப்பது மன்னிக்க முடியாத குற்றம். கர்நாடகத்தில் கழிவுநீர் கலப்பதைக் கண்டிக்கிறோம். இது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், தமிழகத்தில் காவிரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து நிறுத்துவதும் அவசியமாகும்.
திருச்சி மாநகராட்சி சார்பில் அப்பர் மண்டபம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் நீரேற்று நிலையம் செயல்படாததால், திருச்சி மாநகரின் கழிவுநீர் இரவு நேரங்களில் காவிரியில் நேரடியாக திறந்துவிடப்படுகிறது. இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இனியாவது, காவிரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
திருச்சி மாநகராட்சி தலைமைப் பொறியாளர் (பொ) என்.நாகேஷ் கூறும்போது, “திருச்சி மாநகரக் கழிவுநீர் மட்டுமல்ல, கரூர் சாலைப் பகுதியில் உள்ள ஊராட்சிகளின் கழிவுநீரும் காவிரியில் கலக்கிறது. நாங்கள் மட்டும் என்ன செய்ய முடியும்?” என்றார்.