

தமிழக குழந்தைகள் கேரள மாநிலத்தில் விற்பனை செய்வது, அந்த குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்பாக விசாரணை நடத்த இரு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் டி.முருகேசன் தெரிவித்தார்.
மதுரையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விழுப்புரம், சேலம் மாவட்ட குழந்தைகள், கேரள மாநிலம் திருச்சூரில் விற்கப்படுவதாகவும், அந்த குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவதாகவும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் வந்தது. இது தொடர்பாக பதிலளிக்க கேரளம், தமிழக டிஜபி மற்றும் தலைமை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பள்ளியில் துப்பரவு பணியாளர் வராததால், அதே பள்ளியில் படிக்கும் துப்புரவு பணி யாளர் குழந்தைகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்ததாக தலைமை ஆசிரியர் மீது புகார் வந்துள்ளது. விசாரணையில் இந்த சம்பவம் நடந்தது உண்மையென தெரியவந்தது. அந்தக் குழந்தைகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கவும், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.