

பூசாரி நாகமுத்து தற்கொலை தொடர்பான வழக்கில் பெரியகுளம் நகராட்சித் தலைவரும், தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருமான ஓ.ராஜா நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் கோயில் பூசாரி நாகமுத்து. இவர் கடந்த 2012-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் பெரியகுளம் நகராட்சித் தலைவரும், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சித் தலைவர் விஎம்.பாண்டி, மணிமாறன், சிவக்குமார், லோகு, ஞானம், சரவணன் ஆகிய 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, பெரியகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, 7 பேரும் 26-ம் தேதிக்குள் பெரியகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூறி, மாஜிஸ்திரேட் மாரியப்பன் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையில், ஜாதிப் பெயரை சொல்லித் திட்டியதாகக் கூறி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின்கீழ் ராஜா, பாண்டி, மணிமாறன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, ஓ.ராஜா தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 3 வாரத்துக்குள் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பேரூராட்சி தலைவர் பாண்டி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்து ஜாமீனில் சென்றார். இந்நிலையில், இவ்வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஓ.ராஜா தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சிவஞானம் முன்னிலையில் நேற்று சரண் அடைந்தார்.
வழக்கு விசாரணை நடைபெற்றபோது, அரசு சிறப்பு வழக்கறிஞர் வெள்ளைச்சாமி, ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஓ.ராஜாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி விடுதலை செய்து உத்தரவிட்டார்.