

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் பிரசார செலவை ஜெயலலிதாவின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாத சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் பிரசாரம் செய்ததால் அவர்களது பிரசார செலவை முதல்வரும் அதிமுக வேட்பாளருமான ஜெயலலிதாவின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று மக்கள் மாநாடு கட்சி வேட்பாளர் டி.பால்ராஜ் வழக்கு தொடர்ந்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இவ் வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “நட்சத்திர பேச்சாளர்கள் கலந்துகொள்ளும் பேரணி அல்லது பொதுக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட வேட்பாளரும் கலந்துகொண்டால் மட்டுமே அது வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். இல்லாவிட்டால், நட்சத்திர பேச்சாளரின் போக்குவரத்து செலவு மட்டுமே வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி எம்.சத்தியநாராயாணன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிந்த பிறகு தங்களது செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பார்கள். அதில் தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் செலவுக்கணக்கில் வேட்பாளர் தவறு செய்திருந்தால் அவரை மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தகுதி இழக்கச்செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி மனுதாரரின் மனு தகுதியானதாக இல்லை என்பதால் அது தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.