

தேர்தல் முடிந்த பிறகு, விடுபட்டவர்கள் அனைவருக்கும் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும் என, வருவாய் துறை அமைச்சர் ரமணா தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், சோழ வரம் ஒன்றியம், காரனோடை யில் அதிமுகவின் தேர்தல் அலுவலகம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. பின்னர், திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து, வருவாய்த்துறை அமைச்சர் ரமணா, பால்வளத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பாடியநல்லூர் பகுதியில் பிரச்சாரம் செய்தனர்.
பிரச்சாரத்தில் அமைச்சர் ரமணா பேசுகையில், தமிழக முதல்வர் பதவியேற்ற கடந்த மூன்றாண்டுகளில், பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளார். குறிப்பாக, முதியோர் உதவித் தொகை ஆயிரம் ரூபாயாக உயர்வு, தாலிக்கு தங்கம், இலவச அரிசி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது.
இலவச மிக்சி, கிரைண்டர் பலருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. தேர்தல் முடிந்த பிறகு விடுபட்ட அனைவருக்கும் மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும். இப்பகுதியில் சில இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. அவையும் தேர்தல் முடிந்தபிறகு சீரமைக்கப்படும்” என்றார்.