

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தில் மூன்று இடங்களில் அரசு இயங்கியது. தற்போது ஓர் இடத்தில் கூட அரசு இயந்திரம் செயல்படவில்லை என கோவையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் 115 ஜோடிகளுக்கு சரவணம்பட்டியில் திருமணம் நடைபெற்றது. விழாவில், மு.க.ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் 63 வகையான சீர்வரிசைகளையும் மணமக்களுக்கு அவர் வழங்கினார்.
விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அந்த கடிதத்தில் நான் கேட்டுள்ள எந்த கேள்விக்கும் அவரால் பதில் சொல்ல முடியாது. அப்படி அவர் பதில் அளித்து விட்டால் அவர் முதலமைச்சர் என்பது வெளிப்பட்டுவிடும். முதல்வர் பதவி ஏற்றதில் இருந்து இதுவரை முதல்வர் நாற்காலியில் அவர் அமரவில்லை. அவரது இல்லத்தின் முன்பு நிதி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் என்றுதான் போடப்பட்டு இருக்கிறது. தன்னை ஓரு முதல்வர் என்று சொல்லவே அச்சப்படும் முதல்வர் பன்னீர்செல்வம். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோட்டை, போயஸ்கார்டன், கோடநாடு ஆகிய மூன்று இடங்களில் இருந்து அரசு இயங்கியது. தற்போது ஓர் இடத்தில் கூட அரசு இயந்திரம் செயல்படவில்லை.
ஜெயலலிதா வழக்கின் தீர்ப்புக் காகவே முதலீட்டாளர் மாநாடு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. அவர் கடந்த 4 ஆண்டுகளாக தொழில்முனைவோரை அழைத்து எந்த நிகழ்ச்சிகளும் நடத்தாது ஏன்?. இவ்வாறு அவர் பேசினார்.
வரதட்சணை வாங்க மாட்டோம்; பெண்களை துன்புறுத்த மாட்டோம் என மணமகன்களை உறுதிமொழி ஏற்க வைத்தார்.
தொழில் துறையினர் சந்திப்பு
இந்நிகழ்ச்சிக்கு பின்பு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த ஸ்டாலினை காட்மா, காஸ்மோபேன், கிரில் தயாரிப்பாளர்கள், கம்ப்ரசர் மோட்டார் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட தொழில் முனைவோர் சந்தித்து பேசினர்.
‘தமிழகத்தில் 110 மடங்கு உயர்ந்துள்ள மின்கட்டண உயர்வால் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழில்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளன. தமிழக அரசின் ஊக்குவிப்பு இல்லாததால் தொழில்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டன.
புதிய முதலீடுகள் எதுவும் இல்லாததால் பெரிய நிறுவனங்களைச் சார்ந்து இருக்கும் குறுந்தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன’ என ஸ்டாலினிடம் தெரிவித்ததாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.
வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது சம்பந்தமாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல ஸ்டாலின் உறுதி தெரிவித்ததாக அவர்கள் மேலும் கூறினர்.