

2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் பத்திரிகையாளர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது:
சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினமான இன்று ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு ஜனநாயகத்தை மிளிர வைத்திருக்கும் பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகை நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் அவர்களின் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் செலுத்தி வருகிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
அரசிலும், அரசியல் நடவடிக்கைகளிலும் உள்ள குற்றங் குறைகளைச் சுட்டிக்காட்டும் பத்திரிகைகளின் பணி மிக முக்கியமானது என்பது மட்டுமின்றி அதை எதைக் கொண்டும் அளவிட முடியாது.
மக்கள் தங்களுக்குத் தேவையான, சரியான, உண்மையான தகவல்களை பெறுவதற்கு வழிகாட்டியாக இருப்பதே பத்திரிகைகளின் மிகப் பெரிய பொறுப்பு.
அந்த வகையில், திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் பத்திரிக்கையாளர்களின் மீது அன்பு செலுத்தி நம்பிக்கையும் கொண்டிருக்கிறது. அவர்களின் சுதந்திரத்தை பேணி பாதுகாத்திருக்கிறது.
அவர்கள் சொல்லும் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் நெருக்கடி நேரங்களில் எல்லாம் மதித்து நடந்திருக்கிறது. சாதாரண மக்கள் விரும்பும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் உருவாக்குவதில் பத்திரிகைகள் முக்கியப் பணியாற்றுகின்றன என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம்.
பத்திரிகைச் சுதந்திரத்தின் முக்கியத்துவம் கருதித் தான் நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய தலைவர்கள் "அரசியல் சட்டப் பிரிவு 19-ல் வழங்கியுள்ள ஆறு சுதந்திரங்களில் ஒன்றாக பத்திரிகைச் சுதந்திரத்தையும் சேர்த்திருக்கிறார்கள்" என்பதை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.
இப்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சி, நூற்றுக்கணக்கான மான நஷ்ட வழக்குகளைப் பதிவு செய்து பத்திரிகையாளர்களையும், பத்திரிகை நிறுவனங்களையும் மிரட்டிக் கொண்டிருந்தாலும், 2016ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அந்த மானநஷ்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு, பத்திரிகைகளின் சுதந்திரம் மீட்கப்படும் நல்ல நிலை உருவாகும் என்று இந்த நேரத்தில் உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.