Published : 30 May 2015 03:37 PM
Last Updated : 30 May 2015 03:37 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஆய்வுப் பணி கண்துடைப்பா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி கண்துடைப்புக்காக நடத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் விபத்துகளில் அடிக்கடி சிக்கி மாணவர்கள் உயிரிழப்பதை தடுத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் வாகனங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை காலத்தில், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து சான்று வழங்கி வருகின்றனர். அதன்படி, இந்தாண்டும் ஆய்வுப் பணி நடக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 834 பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் நடைபெற்று வரும் பணியில், நேற்று முன்தினம் வரை 553 வாகனங்கள் முழுமையாக ஆய்வு செய்துள்ளதாக, தி.மலை வட்டார போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது.

கல்வி நிறுவன வாகனங்களை முழுமையாக ஆய்வு செய்ய, 30-ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒருநாள் எஞ்சியுள்ள நிலையில் 281 வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும். அந்த வாகனங்களை சம்பந்தப்பட்டவர்கள் ஆய்வு செய்வதற்கு கொண்டு வரவில்லை என்று வட்டார போக்குவரத்து அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்ய கொண்டு வரப்பட்ட வாகனங்கள் சிலவற்றின் நிலை மோசமாக இருந்தது. வாகனத்தில் முதலுதவி சிகிச்சை பெட்டி, தீ தடுக்கும் கருவி ஆகியவை நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதனை அட்டைப் பெட்டியில் வைத்துக்கொண்டு வரப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்து வழங்கப்படும் எப்.சி தேதியும் சிலவற்றில் குறிப்பிடவில்லை. இருக்கைகள் கிழிந்து அலங்கோலமாக இருந்தது. கட்டுக்கம்பியைக் கொண்டு தகடுகளை கட்டியிருந்தனர். வெளிப்புற தோற்றத்திலேயே, இத்தனை குறைபாடுகள் என்றால், உள்புறத்தில் எத்தனை குறைபாடு இருக்கும் என்று தெரியவில்லை.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “கல்வி நிறுவன வாகனங் களை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்வது கிடையாது. குறைபாடுகளை சுட்டிக்காட்டி சரி செய்யுமாறு கூறி அனுப்பும் நிகழ்வும் நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்தாண்டு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளி வாகனங்கள் கவிழ்ந்தும், விபத்தில் சிக்கியும் மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை வெளிப்புற தோற்றத்தில் பார்த்தாலே குறைபாடுகளை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

ஆய்வு செய்யும் அதிகாரிகள், ஒவ்வொரு வாகனத்தையும் குறைந்தபட்ச தொலைவுக்கு ஓட்டிப் பார்த்து தரச்சான்று வழங்க வேண்டும். ஆனால், அவர்கள் 50 அடி தொலைவுக்கு ஓட்டிப் பார்த்து சான்று வழங்குகின்றனர். பிரேக் பிடிப்பதை மட்டும் உறுதி செய்துகொள்கின்றனர்.

இஞ்ஜின் மற்றும் இதர பாகங்கள் இயங்கும் விதம் குறித்து முழுமையாக ஆய்வு செய்வதில்லை. இந்த நிலை தொடரக்கூடாது. ஒவ்வொரு வாகனத்தையும் முழுமையாக ஆய்வு செய்து மாணவர்களின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x