Published : 07 May 2014 12:38 PM
Last Updated : 07 May 2014 12:38 PM

முல்லைப் பெரியாறு தீர்ப்பு தமிழக உரிமைக்கு கிடைத்த வெற்றி: ராமதாஸ்

முல்லைப் பெரியாறு வழக்கின் தீர்ப்பு தமிழகத்தின் உரிமைகளை உறுதி செய்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்றும், இதற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

சற்று தாமதமாக கிடைத்த நீதி என்றாலும், தமிழகத்தின் உரிமைகளை இத்தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள இத்தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமை யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகும். ஆனால், திராவிடக் கட்சிகளின் அலட்சியத்தால் முல்லைப்பெரியாற்றில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை இழந்தோம்.

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதற்கான தீர்ப்பு கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே பெறப்பட்டது.

ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு சட்டம் நிறைவேற்றி நமது உரிமையைப் பறித்தது.

கேரள அரசின் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டு ஒரு புறம் சட்டப் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், இன்னொரு புறம் மக்களின் உரிமைப் போராட்டம் தொடர்ந்தது. இப்பிரச்சினையில் மக்களுக்கு ஆதரவாக பா.ம.க.வும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது.

இத்தகைய சூழலில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தென்மாவட்ட விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது.

அதேநேரத்தில், முல்லைப்பெரியாறு பிரச்சினையை வைத்து அரசியல் லாபம் தேட முயலும் கேரள அரசியல்வாதிகள் இந்த தீர்ப்புக்கு தடை வாங்க முயற்சிப்பார்கள் என்பதால், தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு அந்த முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.

அணையின் நீர்மட்டம் தற்போது 111 அடியாக இருக்கும் நிலையில், தற்போது பெய்து வரும் மழையையும், கோடைக்காலத்தில் பெய்யும் மழையையும் பயன்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பின் 2006 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டபிறகு அணையின் நீர்மட்டத்தை அதன் முழுகொள்ளவான 152 அடியாக உயர்த்த வேண்டும்.

அதேநேரத்தில் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து இரு மாநில மக்களுக்கு இடையிலான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய தமிழக, கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" இவ்வாறு ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x