

விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஓசி ஸ்வீட் சாப்பிட்டதில் பெண் போலீஸுக்கும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பாக எஸ் பி நரேந்திர நாயர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட நேற்று பூமி பூஜை நடந்துள்ளது. அந்த கட்டிடத்தை கட்டும் ஒப்பந்ததாரர் சார்பில் மரியாதை நிமித்தமாக போலீஸ் ஸ்டேஷனில் பணி புரிவோருக்கு ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டது.
அப்போது பணியிலிருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன் , உடன் பணியாற்றும் பெண் போலீஸ் ராஜேஸ்வரி தன் டேபிளில் வைத்திருந்த ஸ்வீட் பாக்ஸில் இருந்த ஸ்வீட்டை எடுத்து சாப்பிட்டார்.
இதை தட்டிகேட்ட பெண் போலீஸின் கன்னத்தில் சின்னப்பன் அறைந்துள்ளார். உடனே பெண் போலீஸ் ராஜேஸ்வரியும் சின்னப்பனை அறைந்துள்ளார்.
இந்த சம்பவத்தை ஸ்டேஷனில் இருந்த போலீஸார் மற்றும் பொது மக்கள் நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இத்தகவல் வாட்ஸ் அப் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து விழுப்புரம் எஸ் பி நரேந்திர நாயர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சின்னப்பன், ராஜேஸ்வரி இருவரையும் எஸ் பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணை கைதிக்கு கைவிலங்கிட்ட நிலையில் '36 வயதினிலே' திரைப்படம் பார்த்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இவர்களில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராஜேஸ்வரியின் கணவர் ஞானபிரகாஷும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.