Published : 12 May 2015 03:54 PM
Last Updated : 12 May 2015 03:54 PM

ஜெயலலிதா வழக்கு தீர்ப்பால் நீதியே தலை குனிந்து நிற்பது போல் தெரிகிறது: விஜயகாந்த்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால், நீதியே தலை குனிந்து நிற்பது போல் தெரிகிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மக்கள் மட்டுமல்லாது இந்தியாவே எதிர்பார்த்திருந்த ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில், உலகமே எதிர்பாராத ஒரு தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்திருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் தருகிறது.

பொது வாழ்வில் லஞ்சம், ஊழல் மூலம் காலணா காசு கூட சம்பாதிக்காமல் பொதுமக்களுக்காக சேவை செய்யவேண்டும் அதுதான் பொது வாழ்க்கை என்ற பாடத்தை கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பின் மூலம் உருவாக்கினார்.

ஆனால் அதே வழக்கில் தற்பொழுது வந்துள்ள தீர்ப்பு நேரெதிர் சிந்தனையை மக்கள் மனதில் உருவாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

ஒரு ஊழல் வழக்கில் வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட ஒரு ரூபாயும் ஒன்று தான், ஒரு கோடியும் ஒன்று தான், இரண்டுமே ஒரே தண்டனைக்குரிய குற்றம் தான் ஆனால் இதற்கு முன்னால் ஒரு வழக்கில் தனி நபர் ஒருவர் பத்து முதல் இருபது சதவிகிதம் வரை தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டதாக மேற்கோள்காட்டி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுபோன்ற வேறுபல வழக்குகளில் இதே குற்றச்சாட்டிற்கு பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதை கருத்தில் கொள்ளாதது மக்கள் மனதில் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனி மனிதர் மீதான வழக்கை, பொது வாழ்க்கையில் முதலைமைச்சர் என்ற பெரிய பதவி வகிக்கும் ஒருவருக்கு பொருத்திப் பார்ப்பது நியாயம் தானா? என்ற கேள்வி அரசியலில் தூய்மையை விரும்பும் எல்லோருடைய மனதிலும் எழுகிறது.

அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை இந்த வழக்கில் இருந்து நீக்கவேண்டும் என்ற மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் கொண்ட அமர்வு அளித்த சிறப்புமிக்க தீர்ப்பில், இந்த நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்கவேண்டும் எனவே அதை மனதில் கொண்டு, ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட கருத்துக்கு மாறாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

சாதாரண சாமான்ய மக்களுக்கு ஒரு நீதி, பண பலமும், அதிகாரபலமும் மிக்கவர்களுக்கு ஒரு நீதியா? என்ற கருத்து மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.

பொதுவாகவே நீதிக்கு தலை வணங்க வேண்டும், ஆனால் நீதியே தலை குனிந்து நிற்பது போல் தெரிகிறது இந்தத் தீர்ப்பால். இதற்கு காலம் தான் பதில் சொல்லும்" இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x