

வாடிக்கையாளர்களிடம் வங்கி அதிகாரிகள்போல பேசி பல லட்ச ரூபாய் மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த மேலும் 3 பேர் சிக்கினர்.
சென்னை அம்பத்தூர் ஐசிஐசிஐ வங்கி மேலாளர் பிரகாஷ் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில், “எங்கள் வாடிக்கையாளர்கள் 42 பேரிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் விவரங்களைப் பெற்று அவர்கள் கணக்கில் இருந்து பல லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளனர். மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் விஜயகுமார், அன்பழகன், உதவி ஆய்வாளர்கள் செல்வராணி, மீனாப்பிரியா மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது:
செல்போன் நிறுவனங்களும் இப்போது வங்கி போல செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக ஏர்டெல் சிம் கார்டு வைத்திருப்பவர்கள் ‘ஏர்டெல் மணி’ என்ற கணக்கை தொடங்கி அதில் ரூ.2 லட்சம் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். இந்த பணத்தை செல்போன் ரீசார்ஜ் செய்வது, மின்சார கட்ட ணம் செலுத்துவது என பல தேவை களுக்கு பயன்படுத்திக் கொள்ள லாம். இப்படி கணக்கு வைத்திருப் பவர்களின் பணத்தைதான் தற்போது மோசடி செய்துள்ளனர்.
மோசடி நபர்கள் தங்களது ஏர்டெல் மணி கணக்குக்கு பணத்தை மாற்றியதன் மூலம் அவர்களின் செல்போன் எண்கள் மற்றும் ஐபி முகவரிகளை எளிதாக பெற முடிந்தது. 42 பேரின் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம், இரண்டு பேரின் ஏர்டெல் மணி கணக்குக்கு மாற்றம் செய்யப்பட் டிருந்தது. அந்த இரண்டு செல் போன் எண்களை வைத்து நடத் தப்பட்ட விசாரணையில் அவை போலியான முகவரி சான்று கொடுத்து பெறப்பட்ட சிம் கார்டுகள் என்பது தெரிந்தது.
புதுடெல்லி உத்தம் நகர் ஹாஸ்ட்சல் சாலையில் சிவசக்தி டெலிகாம் என்ற பெயரில் சிம் கார்டு விற்பனை செய்யும் கடை வைத்திருக்கும் தீப்குமார்(33), பிரவீன்குமார்(32) ஆகியோர் இந்த சிம் கார்டுகளை விற்பனை செய்தது தெரிந்தது. அவர்களை கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கைது செய்தோம். போலியான முகவரி சான்றுகளை ஏற்பாடு செய்து கொடுத்ததே இவர்கள்தான்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசார ணையில், 42 பேரின் பணத்தை மோசடி செய்தது புதுடெல்லியை சேர்ந்த அஸ்ரப் அலி(26), சன்னி, இந்திரஜித்(35) என்பது தெரிந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத் திய விசாரணையில் இந்த 3 பேரும் இதேபோல மோசடி வழக்கில் சிக்கி, குஜராத் போலீஸாரால் கைது செய்யப்பட்டு வதோதரா சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
குஜராத் சென்ற சென்னை போலீஸார் 3 பேரையும் நீதிமன்ற அனுமதியுடன் நேற்று சென்னை அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.
இவ்வாறு போலீஸார் கூறினர்.