Published : 25 May 2015 05:38 PM
Last Updated : 25 May 2015 05:38 PM

அம்மா உணவகத்தில் மொத்தம் 8.5 கோடி இட்லிகள் விற்பனை

மாநிலம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் சுமார் 8.5 கோடி இட்லிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகம் திட்டம் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த உணவகங்களில் ஒரு இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3 என்று விற்கப்படுகிறது.

இத்திட்டம் தொடங்கியது முதல் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 8 கோடியே 40 லட்சத்து 40 ஆயிரத்து 372 இட்லிகள் விற்பனையாகியுள்ளன. மேலும், 1 கோடியே 74 லட்சத்து 35 ஆயிரத்து 27 சாம்பார் சாதமும், 1 கோடியே 45 லட்சத்து 63 ஆயிரத்து 856 தயிர் சாதமும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 5 கோடியே 13 லட்சத்து 69 ஆயிரத்து 22 பேர் பயனடைந்துள்ளனர்.

சென்னையில் 252 உணவகங்கள்

சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் ஒரு அம்மா உணவகம் வீதம் 200 உணவகங்களும், அரசு மருத்துவமனைகளில் ஏழு உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் மேலும் 45 அம்மா உணவகங்கள் சென்னை மாநகராட்சியில் திறக்கப்பட்டுள்ளன. தற்போது 252 அம்மா உணவகங்கள் சென்னையில் இயங்குகின்றன.

பிற மாவட்டங்களில் உணவகங்கள்

மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி ஆகிய 9 மாநகராட்சிகளில் தலா 10 உணவகங்களும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒரு அம்மா உணவகமும் செயல்பட்டு வருகின்றன.

கோவை, மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளில் 4 அம்மா உணவகங்கள், தமிழகம் முழுவதும் உள்ள 124 நகராட்சிகளில் 128 அம்மா உணவகங்கள், மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் 23 அம்மா உணவகங்கள் சமீபத்தில் திறக்கப்பட்டன.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x