

சமூக பாதுகாப்பு திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ள இலவச தொலைபேசி சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
தேசிய முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் ஆகிய திட்டங்கள் வருவாய்த் துறை மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இவை உட்பட பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் ரூ.4,300 கோடி செலவில் 32 லட்சம் ஏழைகளுக்கு ரூ.1,000 மாத உதவித்தொகை 2011-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக பாதுகாப்புத் திட்டங்களின் பயன்கள் தகுதியுடைய அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
சமூக பாதுகாப்புத் திட்டங்களின் பயனாளிகள் விவரம் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு அவை தினமும் கண்காணிக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் இதர விவரங்கள், சந்தேகங்களை பயனாளிகள் அறிந்துகொள்ள ஏதுவாக, 4 இலக்க இலவச தொலைபேசி சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
வருவாய்த் துறை செயலர் இரா.வெங்கடேசன், வருவாய் நிர்வாக ஆணையர் தி.ஸ்ரீ.ஸ்ரீதர்,சமூக பாதுகாப்பு திட்டங்கள் ஆணையர் பிரதீப் யாதவ், வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் மு.ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.