

கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சோதனை சாவடிகளில், காவலர் பற்றாக் குறை நிலவுவதால் கண்காணிப்புப் பணியில் சுணக்கம் காணப் படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சட்ட விரோத செயல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித் துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக் கத்தில் அணுமின் நிலையம் மற்றும் மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் ஆகியவை அமைந்துள்ளன. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதிகளை பாதுகாக்கும் பணியில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் ஈடுபட்டுள்ளனர். கோவளம், மாமல்லபுரம், பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், வாயலூர், கூவத்தூர், எல்லை யம்மன் கோயில், கொளத்தூர் ஆகிய இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர். கல்பாக்கம் பகுதிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் எழுந்துள்ளதால் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தி வருகின் றனர்.
இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப் பட்டுள்ள சோதனை சாவடிகளில் காவலர் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. சில இடங்களில் சோதனை சாவடிகள் பூட்டிய நிலையில் உள்ளன. இதனால், இந்த சாலை வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாமல்லபுரம் பகுதிவாசிகள் கூறியதாவது: இங்கு வரும் வெளிநாட்டு பயணிகள் கடற்கரை பகுதிகளில் என்ன செய்கின்றனர் என்பதையும் கிழக்கு கடற்கரை சாலை மூலம் கடற்கரை பகுதிக்கு வரும் வாகனங் களையும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் சோதனை செய்வது வழக்கம். ஆனால், கடந்த சில மாதங்களாக இங்குள்ள சோதனை சாவடிகள் பெரும்பாலும் காவ லர்கள் இன்றி காணப்படுகின்றன.
வெங்கம்பாக்கம், பூஞ்சேரி ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் பூட்டிக் கிடக்கின்றன. கடற்கரை பாதுகாப்பை பலப் படுத்தும் வகையில் போதுமான காவலர்களை நியமித்து 24 மணி நேரமும் சோதனை சாவடிகள் செயல்பட நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மாமல்லபுரம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் வேலு கூறியதாவது: கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில், கடலோர பாதுகாப்பு குழுமத்தின் 40 காவலர்கள் மற்றும் ஊர்க் காவல் படையைச் சேர்ந்த 30 காவலர் என மொத்தம் 70 காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய ஒரு வீரர் மற்றும் 4 காவலர்கள் பணியில் ஈடுபடுவார்கள். சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ளப் படுவதால், சில நேரங்களில் வேறு பகுதியில் காவலர்கள் பணியில் ஈடுபட வேண்டி வரும். அப்போது, சோதனை சாவடிகளில் 2 அல்லது 3 காவலர்கள் பணியில் இருப்பர். கடலோர பாதுகாப்பு குழுமத்தின் காவல் நிலையங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில், கூடுதலாக 20 முதல் 30 காவலர்கள் நியமிக்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.