

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை பொதுநலன் வழக்கு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:
பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அசாம், பிஹார் ஆகிய மாநிலங்களில் கூடுதல் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என மத்திய அரசு 2015 பிப்ரவரியில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 2 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளனர். இந்த எண்ணிக்கையை 2021-ல் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்றரீதியில் உயர்த்துவதற்காக கூடுதல் இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப் படுகின்றன. தமிழகத்தில் 3 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர்தான் உள்ளார். இதனால் மக்களுக்கு போதிய மருத்துவ உதவி கிடைப்பதில்லை. சென்னையில் உலகத் தரம் வாய்ந்த பல மருத்துவமனைகள் உள்ளன. தமிழகத்தில் 15 தென் மாவட்டங் களுக்கு மையமாக இருப்பது மதுரை. மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மக்கள்தொகை அதிகமாக உள்ளது. மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க போதிய வசதிகளும் உள்ளன.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனையை அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின், மத்திய சுகாதாரத் துறை செயலர், எய்ம்ஸ் இயக்குநர், தலைமைச் செயலர், மாநில சுகாதாரத் துறை முதன்மை செயலர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.